டில்லி,

ஒ.பி.சி பிரிவில் உள்ள சமூகத்தினரை துணை வகைப்படுத்தும் ஆய்வு  செய்ய 5 பேர் கொண்ட ஆணையம் அமைத்து ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் அளிக்கப்பட்டிருக்கும் இட ஒதுக்கீட்டு பலன்கள் ஒரு சாராருக்கே செல்வதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

இதன் காரணமாக  ஒபிசி பிரிவில் இருக்கும் மிகவும் பின்தங்கிய சமூகத்தினருக்கும் சலுகைகள் சென்றடைய வேண்டும் என்றும், அதை  உறுதி செய்ய ஆணையம் அமைக்கப்பட வேண்டும் பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 340வது பிரிவில் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, இதற்கான ஆணையத்தை அமைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆணையத்தின் தலைவராக டில்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜி.ரோஹினி நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது  தலைமையில் 5 பேர் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆணையம், ஓபிசி பிரிவில் உள்ள துணைப்பிரிவுகள் குறித்து ஆய்வு செய்து,  ஆய்வறிக்கையை 12 வாரங்களில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.