கொரோனா வைரஸ் சிகிச்சை குறித்து தமிழக அரசுக்கு நுரையீரல் நிபுணரின் கடிதம்

டலூர்

கொரோனா சிகிச்சை குறித்து அரசுக்கு டாக்டர் கலைகோவன் பாலசுப்ரமணியன் கடிதம் எழுதி உள்ளார்.

பிரபல நுரையீரல் சிகிச்சை நிபுணரான கடலூரை சேர்ந்த டாக்டர் கலைகோவன் பாலசுப்ரமணியன் அரசுக்கு எழுதி உள்ள கடிதத்தின் தமிழாக்கம் இதோ

தமிழக சுகாதாரத் துறைக்கு நுரையீரல்  மருத்துவரின் மனம் திறந்த மடல்,

பொருள்–தமிழகத்தில் கொரோனா மருத்துவ சிகிச்சை துரிதப்படுத்துதல் சம்பந்தமாக..

சுகாதாரத்துறை வல்லுநர்களே,

வணக்கம்…

நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன்…மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசின் இந்த முயற்சிக்கு ஒவ்வொரு குடிமகனும் 100% ஆதரவு வழங்க வேண்டும் என்பதையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்…

உலக சுகாதார நிறுவனம் (WHO) கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 40,500 மக்கள் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்,1750 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அறிவித்துள்ளது…. இதுவரையில் மொத்தம் 16 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ளனர்….உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் தீவிர சிகிச்சை பிரிவில்(ICU) அனுமதிக்கப்பட்டு இருந்தனர் என்பதையும் இந்நேரத்தில் நினைவுபடுத்த விழைகின்றேன்.. மதுரையில்   கொரோனாவால் இறந்தவர் கூட  தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர் தான்..

தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆயிரத்திற்கும் குறைவான தீவிர சிகிச்சை படுக்கைகளே(ICU Beds) உள்ளது… அதிலும் செயற்கை சுவாச கருவி (VENTILATORS)வசதி 400 மட்டுமே உள்ளது …

அவைகளில்  பெரும்பாலானவை சென்னையில் மட்டுமே உள்ளது… இதர 37 மாவட்டங்களில் உள்ள அரசாங்க மருத்துவமனையில்  200க்கும் குறைவான செயற்கை சுவாச கருவிகளே உள்ளன… அவற்றில் எத்தனை கருவிகள் முழுமையாக செயல்படுகின்றது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்..

நான் அறிந்தவரையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் MD  பொது மருத்துவர்களே  பணியமர்த்தப்பட்டுள்ளனர்.. சில அரசு மருத்துவமனைகளில் மயக்கவியல் துறை வல்லுநர்களும் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றுகின்றனர்…அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் முதுநிலை மாணவர்கள்(PG Residents)தான் தீவிர சிகிச்சைப் பிரிவில் முதுகெலும்பாக இருக்கின்றனர்.. இவர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டாலும் கூட இந்நேரத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு சிறப்பு வல்லுநர்களின்( DM  CRITICAL CARE SPECIALISTS ) வழிகாட்டுதல் நிச்சயம் தேவை …முன்னேறிய நாடுகள் அனைத்திலும்  அவர்களின் பங்கு போற்றத்தக்கதாக உள்ளது…

தமிழக அரசு மருத்துவமனைகளில்  தீவிர சிகிச்சைப் பிரிவு சிறப்பு வல்லுநர்கள்(CRITICAL CARE INTENSIVIST) ஒருவர் கூட இல்லை என்பது வேதனை அளிக்கிறது..

175 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை பொது மருத்துவமனையில் கூட அத்துறை வல்லுநர்கள் யாரும் இல்லை..

உலகப் புகழ்பெற்ற சென்னை பொது மருத்துவமனையில், அத்துறை சிறப்பு வல்லுநர்கள் இருந்திருந்தால் நமது முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களுக்கு அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளித்திருக்க முடியும்.. நாட்டின் தலைநகரமான டெல்லியில்,குடியரசு தலைவர்  முதல் பிரதமர் வரை அனைத்து அரசியல்  பிரமுகர்களும், அரசு மருத்துவமனையான எய்ம்ஸ் இல் தான் சிகிச்சை பெறுகின்றனர்…. காரணம் என்னவென்றால் அங்கு தீவிர சிகிச்சை பிரிவு வல்லுநர்கள் அதிகம் உள்ளனர்…

இந்நிலை தமிழகத்தில் உள்ளதா என்றால் இல்லவே இல்லை என்றுதான் கூற வேண்டும்…. சாதாரண காய்ச்சல் முதல் சிறு அறுவை சிகிச்சை வரை இங்கு உள்ள ஆட்சியாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவருமே தனியார் மருத்துவமனையை  நாடுகின்றனர்… பொதுமக்களும் இதனால் அரசாங்க மருத்துவமனைகளில் மேல் உள்ள நம்பிக்கையை இழந்து விட்டனர்.. இந்நிலையில் போதுமான வசதிகள் இல்லாத அரசாங்க மருத்துவமனைகளில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை அனுமதிப்பது என்பது மருத்துவத் தற்கொலை என்றே தோன்றுகிறது…

கொரோனாவால்  பாதிக்கப்பட்ட நபர் தனிமைப் படுத்தப்பட்டு,எதிர்மறை  அழுத்தம்(Negative pressure Isolation Room) உள்ள அறைகளில் தங்க வேண்டும்.. குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளவர்கள் மற்றும் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டவர்கள் அனைவரும் எதிர்மறை  அழுத்தம்(Negative pressure Isolation Room) உள்ள அறைகளில் இருந்தால்தான் நோய் பரவல் குறையும்.. அப்படிப்பட்ட வசதி எந்த அரசு மருத்துவமனைகளிலும் தற்போது இல்லை… இதனால் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து அந்த நோய் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது… ஸ்பெயின் நாட்டில் இதுதான் நடந்தது… அங்கு  கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நபர்களில் 15% மருத்துவப் பணியாளர்கள்… நம் நாட்டில் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டால் 30 முதல் 40% மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாதிக்கப்படுவார்கள்…

எனவே உயர் சிகிச்சை தேவைப்படும் அனைத்து கொரோனா நோயாளிகளையும் எவ்வித  தாமதமும் இன்றி ,அனைத்து வசதிகளையும்(ECMO உட்பட) கொண்டுள்ள தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக மாற்ற வேண்டும்…. அவர்களுக்கு,24 மணிநேர தீவிர சிகிச்சைப் பிரிவு வல்லுனர்களின் கண்காணிப்பில் முறையான சிகிச்சை அளித்திட வேண்டும்….முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்… தனியார் மருத்துவமனையின் செலவை அரசே ஏற்க வேண்டும்…

கொரோனா  நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தருணத்தில்  ஒரு மருத்துவனாக எனது  பரிந்துரைகள் –

1) அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 50% படுக்கைகள்  கொரோனா நோயாளிகளுக்கென்று  ஒதுக்கப்பட வேண்டும்… மூன்று மாவட்டங்களை இணைத்து, ஒரு பிரத்தியேக கொரோனா பல்நோக்கு மருத்துவமனை செயல்படுத்தப்பட வேண்டும்.. அவை குறைந்தது 200 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக இருத்தல் வேண்டும்…

2) அனைத்து  தாலுக்கா மற்றும் மாவட்ட தலைநகர் மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 50 %  உடனடியாக உயர்த்தப்பட வேண்டும்..அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளை 100% உயர்த்தப்பட வேண்டும் (ஓரிரு வாரத்தில் இதுவும் போதாது என்ற நிலைமை வரக்கூடும்)….

3) மருத்துவ கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் அனைவரையும் சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த புறநோயாளிகள் பிரிவில் பணியமர்த்த வேண்டும்… இது எம்டி பொது மருத்துவர்களின் வேலைப்பளுவை குறைக்கும்… அதே சமயத்தில்  பச்சிளம் குழந்தைகள் ,இருதய நோயாளிகள் ,சிறுநீரக மாற்று நோயாளிகள் புற்றுநோய் உள்ளவர்களுக்கு உள் நோயாளி சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.. வீட்டிலிருந்து மருத்துவமனைக்கும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குமான போக்குவரத்து ஏற்பாடுகளை  ஊரடங்கு நேரத்தில், தமிழக அரசு ஏற்க வேண்டும்…

4) தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 3000 குழந்தைகள் பிறக்கின்றன.. 21 நாட்கள் ஊரடங்கும் போது சராசரியாக 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்திருப்பார்கள்.. தாய், சேய் நலத்தைப் பேணிக்காக்கும் அனைத்து ஏற்பாடுகளும் தடையின்றி நடைபெற தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும்… கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களை  தனியாக பிரித்து சுத்தம் செய்ய வேண்டும்..  கொரோனா நோயாளிகள்  பயன் படுத்திய உணவு கழிவுகள் ,மருத்துவ கழிவுகளை தனியாகப்  பிரித்து அப்புறப்படுத்த தூய்மை பணியாளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும்..

4) கொரோனா தீவிர சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 8 மணிநேர சுழற்சியில் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்… தற்போது மருத்துவர்கள் 24 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்கின்றனர்..24 மணிநேர தொடர் வேலைகளில் ஈடுபடும் இளநிலை மற்றும் முதுநிலை  மருத்துவர்களுக்கு நோய் தொற்று நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளது…

5)நோயாளிகளிடம் இருந்து மருத்துவர்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான உபகரணங்கள் தங்கு தடையின்றி வழங்கப்பட வேண்டும்… தலைகவசம் , முகக் கவசம் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (Personal protective equipment-#PPE) அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்..

6) தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு தேவையான #ABG ( Arterial Blood Gas analysis- ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை கண்டுபிடிக்கும் )கருவிகள் அனைத்து தாலுக்கா மற்றும் மாவட்ட தலைநகர் மருத்துவமனைகளில் வழங்கப்படவேண்டும்.. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ECMO கருவிகள் பொருத்தப்பட வேண்டும்… இவை இரண்டு கருவிகள் இல்லாமல் தீவிர சிகிச்சை பிரிவு 100% சாத்தியமில்லை….

7) சீனாவின் #யூகான் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினருடன் தமிழக மருத்துவர்களை காணொளி(#WEBINAR) மூலம் தொடர்புகொண்டு சிகிச்சைகள் குறித்து ஆலோசனைகள் பெற வேண்டும்… நமக்கான நேரம் மிகக்குறைவு என்பதால் அரசு உடனடியாக இதை செயல்படுத்த வேண்டும்… சீன மருத்துவர்களின் அனுபவத்திலிருந்து நம் மருத்துவர்கள் பாடம் கற்க முடியும்…

8) தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகள் இறக்கும்போது, நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவர்களை தாக்குவது தொடர்கதையாக உள்ளது.. கொரோனா நேரத்தில் அவ்வித அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் அரசு மருத்துவர்களை பாதுகாக்க வேண்டும்… கொரோனா பாதிப்பு நோயாளிகள் இறக்க நேரிட்டால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் #DEATH_AUDIT  செய்தாக வேண்டும்.. இதில் மாவட்ட மேஜிஸ்ட்ரேட், மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் காணொளி மூலமாக கலந்து கொள்ள வேண்டும்…

9)கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவரின் பெயரிலும் அரசாங்கம் 2 கோடி முதல் 5 கோடி வரை மருத்துவ காப்பீடு (#MEDICAL_INSURANCE)வழங்க வேண்டும்…

10) அரசாங்கத்திற்கு ஆலோசனை கூற முன்வரும் மருத்துவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதை அரசு கைவிட வேண்டும்… பழிவாங்கும் நடவடிக்கைகளால் பணிமாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்கள் மீண்டும் அதே இடத்தில் பணி அமர்த்தப்பட வேண்டும்… இது  மருத்துவர்களின் உளவியலை வலுப்படுத்தும்.. ஆரோக்கியமான சூழலுக்கு வழிவகுக்கும்.

இறுதியாக,

கொரோனா  நோய் தமிழ்நாட்டில்  தீவிரமடைய இன்னும் மூன்று நான்கு  நாட்கள் அவகாசம் உள்ளது… இந்த நேரத்தில் மத்திய அரசாங்கம், எம்.பி தொகுதிக்கான  ஓராண்டு மேம்பாட்டு நிதியை 5 கோடியில் இருந்து 15 கோடியாக உயர்த்திட வேண்டும்.. அந்த தொகை முழுவதும்  மருத்துவமனைகளுக்கு வேண்டிய உபகரணங்கள் வாங்க உடனடியாக செலவிடப்பட வேண்டும்…  (2014-2019 ஆண்டில் மட்டும் செலவிடப் படாத எம் பி தொகுதி  மேம்பாட்டு நிதி   ரூபாய்.1734 கோடி ரூபாய்  இந்தியா முழுவதும் திருப்பி அனுப்பப்பட்டது)

துறைசார் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற தமிழக அரசு இனியும் தயக்கம் காட்டக்கூடாது..

நன்றி.

மருத்துவர் பால.கலைக்கோவன்,

MBBS.,DTCD.,DNB(PULMONOLOGY)

நுரையீரல் துறை  சிறப்பு மருத்துவர் ,

கடலூர்.

(சென்னை, ஹைதராபாத் மற்றும் பாண்டிச்சேரியில்  தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றியவர்)