எஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..

ணக்கம் எஸ்.வி.சேகர் சார்…

உங்களை கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக அறிவேன்.

சமீபத்தில் ஒரு தகவல் கேள்விப்பட்டேன். இஸ்லாமிய பெரியவர் ஒருவர், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதில் ஏதோ பிரச்சினை. நண்பர் மூலம் உங்களுக்கு தகவல் சொல்கிறார். அரசு மூலம் அந்த இஸ்லாமிய பெரியவருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமை விரைந்து கிடைக்க உதவியிருக்கிறீர்கள்.

எனக்கு இதில் ஆச்சரியமில்லை. இப்படி சாதி, மத பேதமின்றி உதவும் குணம் கொண்டவர் என்பதை அறிவேன்.

நீங்கள், எந்த வேறுபாடும் பாராமல் கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை செய்து வருபவர், அரசு மருத்துவமனையில் கிடக்கும் அநாதைப் பிணங்களுக்கு முறையாக இறுதிக்காரியங்களைச் செய்து வருபவர்..இயல்பாக, பந்தா இன்றி பழகக்கூடியவர், நேர்மையான எம்.எல்.ஏ.வாக இருந்தவர்,

எல்லாவற்றுக்கும் மேல் எப்போது போன் செய்தாலும் எடுத்து பேசுவீர்கல். மயிலை எம்.எல்.ஏ.வாக இருந்தபோது செல்போன் எண்ணை அனைவருக்குமாக அறிமுகப்படுத்தி எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் என்று அறிவிப்பு கொடுத்தவர்..

வெளிநாடுகளுக்குச் சென்றாலும் உங்கள் போன் அணைத்துவைக்கப்படாது. “நான் எஸ்.வி.சேகர் பேசுகிறேன். வெளிநாடு சென்றிருக்கிறேன். பீப் ஒலிக்குப் பிறகு தங்கள் தகவலை பதியுங்கள். திரும்பி வந்தவுடன் அழைக்கிறேன்” என்று தனது குரலை பதிவு செய்திருப்பீர்கள். அதே போல வந்தவுடன் அழைப்பீர்கள்.

எஸ்.வி. சேகர்

இன்று உங்கள் செல்போனை அணைத்து வைத்திருக்கிறீர்கள். ஆச்சரியமாக இருக்கிறது.

நீங்கள் வீட்டில் இல்லை என்றும், கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகிவிட்டதாக சொல்கிறார்கள்.

எழுபதை நெருங்கும் வயதில் இது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

இதற்கெல்லாம் காரணம் உங்கள் பேச்சுதான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

உங்கள் நாடகங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் மிக நாகரீமாகவே பேசுபவர் நீங்கள்.

ஆனால் கடந்த சில காலமாகவே உங்களது தனிப்பட்ட பேச்சுக்களும் சரியில்லை.

“2000 ரூபாய் நோட்டில் சிப் இருக்கிறது. அதன் மூலம் அது வைக்கப்பட்டிருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கலாம்” என்று கூறி ஆச்சரியப்படுத்தினார். பிறகு ஆளாளுக்கு அவரை கிண்டல் செய்ய, பரிதாபத்துக்கு ஆளானீர்கள்.

“சங்கராச்சாரியார் கூறினால் மலத்தைக்கூட சாப்பிடுவேன்” என்று அதிர்ச்சி அருவெறுபூட்டினீர்கள். (இதெல்லாம் மிகச்சில உதாரணங்களே..)

சமீபத்தில், பெண் பத்திரிகையாளர்களை – பெண்களை தரம்தாழ்ந்து விமர்சித்து கடுமையான கண்டனத்துக்கு ஆளானீர்கள். இப்போது கைது நடவடிக்கைக்குப் பயந்து தலைமறைவாகிவிட்டார் என்ற விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறீர்கள்.

சட்டத்தை மிக மதிக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்பவர் நீங்கள். நான் கவனித்திருக்கிறேன். நீங்கள் செய்யும் சிறு செலவுகளைக் கூட குறித்து வைத்து, சரியாக கணக்கு எழுதிவைப்பீர்கள். வருமானவரி தாக்கலுக்காக.

இப்படிப்பட்ட நீங்கள் தலைமறைவாகிவிட்டார் என்கிற பேச்சுக்கு ஆளாகக் கூடாது.

உங்கள் பதிவுக்கு ( கருத்துக்கு) இன்னும் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும். சட்ட நடவடிக்கைகளை நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும்.

பிறகு..

வேறென்ன.. யாகாவா ராயினும் நாகாக்க..!

–          பத்திரிகையாளன் டி.வி.எஸ். சோமு

 

கார்ட்டூன் கேலரி