தெஹரான்:

ஈரானில் அமைக்கப்பட்டுள்ள சபாஹர் எண்ணை துறைமுகத்தின் ஒரு பகுதியை ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தொடங்கி வைத்துள்ளார். மத்திய ஆசியாவுக்கு புதிய வர்த்தக வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த துறைமுகத்திற்காக இந்தியா அதிக அளவில் முதலீடு செய்துள்ளது.

இந்த துறைமுகம் ஈரானின் சிஸ்டான் மற்றும் பாலுசிஸ்தான் மாகாணத்தில் வளைகுடாவின் ஓமன் பிரா ந்தியத்தில் அமைந்துள்ளது. அந்நாட்டில் ஒரே கடல் சார்ந்த துறைமுகம் சபாஹர் மட்டுமே. ஈராக் நாட்டுடன் 1983ம் ஆண்டில் ஏற்பட்ட போருக்கு பின்னர் தனது வர்த்தகத்தை மாற்றும் வகையில் இந்த துறைமுகம் அமைக்க ஈரான் நடவடிக்கை மேற்கொண்டது. சாகித் கலந்தாரி மற்றும் சாகித் பெகஸ்தி என இரு தனித்தனி துறைமுகங்களை இது உள்ளடக்கியதாகும்.

பாகிஸ்தானுக்குள் செல்லாமல் பைபாஸ் வழியாக ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியாவுடன் வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்தும் வகையில் இந்த துறைமுக கட்டமைப்புக்கு 1990ம் ஆண்டு முதல் இந்தியா உதவிகளை செய்து வந்தது. சபாஹர் சிறப்பு பொருளாதார மண்டல மேம்பாட்டிற்கு சுமார் 50 ஆயிரம் கோடியை கடந்த ஆண்டு இந்தியா முதலீடு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுடன் நட்புறவை வளர்க்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே ஈரான் துறைமுகத்தை பயன்படுத்தும் வகையில் ஆப்கானிஸ்தான் ஜாரன்ஜ்&டிலராம் இடையிலான சாலையை அமைத்ததன் மூலம் பாகிஸ்தானை சார்ந்து இருக்கும் செயலை இந்தியா முறியடித்துள்ளது.

இந்த பகுதியில் ரெயில் போக்குவரத்து மூலம் இணைப்பை மேற்கொள்ளவும் இந்தியா ஆலோசித்து வருகிறது. இது துறைமுக இணைப்பு மட்டுமின்றி மத்திய ஆசியா, ரஷ்யா, ஐரோப்பாவில் உள்ள இரும்பு மற்றும் எஃகு சுரங்க தொழிலை மேம்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கு ரூ. 600 கோடியை முதலீடு செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.