‘ஆபரேஷன் கிளீன் மணி’‘: ஆவணங்களின் அடிப்படையில் 2வது நாளாக தொடரும் சோதனை!

சென்னை,

‘ஆபரேஷன் கிளீன் மணி’‘ என்ற பெயரில் சசிகலா குடும்பத்தினர் மீது நடைபெற்று வரும் சோதனை இன்று  இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது. அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவனங்களின் பேரில் சோதனை  மேலும் பல இடங்களில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

நாடு  முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள சோதனை 187 இடங்களிலும், 1800 அதிகாரிகள் பங்குபெற்று அதிரடி சோதனை செய்து வருகின்றனர்.

இந்த சோதனையில், ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர். அலுவலகங்கள் மற்றும் தினகரன் உள்ளிட்டோர் வீடுகளில் மற்றும் பெரும்பாலான இடங்களில் இன்று  இரண்டாவது நாளாகவும் சோதனை தொடர்ந்து வருகிறது.

சசிகலா, டிடிவி தினகரன், திவாகரன மற்றும் அவர்களது உறவினர்கள் , நண்பர்கள் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், அவர்களின் வழக்கறிஞர்கள்,  அவர்களுடைய  வீடு அலுவலகங்கள், எஸ்டேட்டுகளில் நேற்று முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் ஜெயா டிவியின் தற்போதைய அலுவலகம், பழைய அலுவலகம் உள்பட சசிகலா உறவினர்கள் வீடுகள், கோட நாடு எஸ்டேட் போன்றவைகளிலும்  சோதனை நடைபெற்று வருகிறது.  தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகாவிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த அதிரடி சோதனையின்போது, ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கூறிய வருமானவரித்துறை அதிகாரி, கிடைக்கப்பெற்றுள்ள ஆவனங்களை சரிபார்த்து வருவதாகவும், அதில் கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் சோதனை விரிவடைந்து வருகிறது, சோதனைகளின் முடிவில்தான் எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது மேலும் என்னென்ன கைப்பற்றப்பட்டது என்பது குறித்த தகவல்கள் தெரிய வரும் என்று கூறினர்.

மன்னார்குடியில் திவாகரன், தினகரன் வீடுகள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகள் உள்ளிட்ட 15 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்  இன்று 2வது நாளாகவும்  சோதனை நடத்தி வருகின்றனர்.  திவாகரன் வீடு மற்றும் அவரது கல்லூரியிலும் சோதனை நடக்கிறது.

அதேபோல், ஜெயா டிவி, ஜெயா டிவி சிஈஓ விவேக் அவரது சகோதரி கிருஷ்ணப்பிரியா இல்லங்களிலும் விடிய விடிய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்லில் சசிகலாவின் வக்கீல் செந்தில் வீடு, டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பாலுசாமி வீடு, செந்திலின் தொழில் பங்குதாரர் சுப்ரமணி வீடு உள்ளிட்ட 5 இடங்களிலும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

இதேபோல் புதுச்சேரியிலுள்ள லட்சுமி ஜூவல்லர்ஸ் கடையிலும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

நாமக்கல்லில் சோதனை நடைபெறும் இடங்களிலேயே அதிகாரிகள் ஓய்வு எடுத்தனர்.

மன்னார்குடியிலுள்ள திவாகரன் வீட்டிலும், திவாகரன் ஆதரவாளர்கள் 13 பேர் வீடுகளிலும் சோதனை 2-வது நாளாக இன்றும் தொடர்கிறது.

மன்னார்குடியில் உள்ள திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியில் சோதனையின்போது ரூ.25லட்சம் பணம் மற்றும் ஏராளமான நகைகள் கைப்பற்றப்பட்ட தாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may have missed