கொரோனா அச்சுறுத்தல் – நவாஸ் ஷெரீப் அறுவை சிகிச்சை ஒத்திவைப்பு

லாகூர்: கொரோனா நெருக்கடி காரணமாக, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு மேற்கொள்ளவிருந்த அறுவை சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிறையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதுடன் அனுமதியும் அளித்தது. இதனையடுத்து, லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், நவாஸ் ஷெரீப்புக்கு நடக்கவிருந்த அறுவை சிகிச்சை ஒத்தி வைக்கப்படுவதாக அவரது மகள் மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நவாஸ் ஷெரீபிற்கு திட்டமிடப்பட்டிருந்த இதய அறுவை சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு, வைரஸ் தொற்று எளிதில் பரவ வாய்ப்புள்ளதால், அறுவை சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கான இதர சிகிச்சைகளை டாக்டர்கள் தொடர்ந்து வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

You may have missed