Random image

ஆபரேசன் சக்சஸ்..பேஷன்ட் நாட்அவுட்..

வ்வளவு வியாக்கியானங்களை சொல்லி விவரித்தாலும் தேர்தல் முடிவுகள் என்று வந்து விட்டால் வெற்றி, வெற்றிதான்.. தோல்வி தோல்விதான்.. இது மக்களுக்கு மட்டுமே பொருந்தும்.. ஆனால் அரசியல் கட்சிகள் அப்படி எடுத்துக்கொண்டு போகமுடியாது.

தோற்றவன் அழுவதும் வென்றவன் களிப்பில் மிதப்பதும் வாடிக்கையான விஷயம். ஆனால் குஜராத்தோ, விசித்திரமான ஒரு கட்டத்தில் போய் முடிந்திருக்கிறது என்றும் சொல்லலாம்.. ஆரம்பித்திருக்கிறது என்றும் சொல்லலாம்.

ஆறாவது முறையாக ஆட்சியை பிடித்தாலும் அதை மோடியால் முழுமையான சந்தோஷமாக கொண்டாட முடியவில்லை..ஆட்சியை பிடிக்காமல் போனதற்தாக ராகுல் காந்தியும் அழவில்லை..மாறாக சந்தோஷத்தில் மிதக்கிறார்..காரணம், முந்தைய தேர்தலைவிட இம்முறை குஜராத்தில் பலம் பெற்றிருப்பதே..

2012ல் 61 இடங்களை பெற்ற காங்கிரஸ் இம்முறை 77 தொகுதிகளை பிடித்திருக்கிறது. அதாவது 16 தொகுதிகளை கூடுதலாக.. இதே 16 குறைந்ததால்தான் பாஜக நொந்துபோயிருக்கிறது..

பெரும்பான்மைக்கு தேவையான 92க்கு மேல் பாஜகவுக்கு கிடைத்திருப்பது வெறும் 7 இடங்கள்தான்.. வென்ற 99 இடங்களில் பத்து இடங்களில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் பாஜக தப்பிப்பிழைத்து வந்துள்ளது அந்த தொகுதிகளில் விழுந்த ‘’யாருக்குமே வாக்களிக்க விரும்பாத நோட்டா’’ ஓட்டுகள், ஒருவேளை காங்கிரஸ்க்கு போயிருந்தால் நிலைமையே மாறிப்போய் இழுபறி கட்டம் ஏற்பட்டிருக்கும்..

2012ல் 115..இப்போது 99 இடங்கள்..இந்த நிலைமையை நினைத்து மட்டுமே பாஜக உள்ளுக்குள் குமுறுவதாக நினைத்தால் அது பெருந்தவறு.. மோடியும் கட்சித்தலைவரான அமித்ஷாவும் கவலைப்படுவது 2014ல் மக்களவை தேர்தலில் கிடைத்த செல்வாக்கிற்கும் இப்போது ஏற்பட்டுள்ள பெரும் சரிவைக்கண்டுதான்

மக்களவை தேர்தலின்போது குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. காங்கிரஸ் பூஜ்யம்.. வாக்கு எண்ணிக்கை புள்ளிவிவரப்படி 165 சட்டமன்றதொகுதிகளில் பாஜக வெற்றி..காங்கிரஸ் வெறும் 17 சட்டமன்ற தொகுதிகளில்தான் பாஜகவைவிட முந்தமுடிந்தது..

இப்படி 2014 ஆண்டு மக்களவை தேர்தல் செல்வாக்கில் கிடைத்த, 165 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி என்கிற புள்ளிவிவர கணக்கை வைத்துதான் இப்போது 2017 சட்டமன்ற தேர்தலில் 150 ப்ளஸ் நிச்சயம் என மோடியும் அமித்ஷாவும் முழக்கமிட்டு வந்தனர்..

இன்னொருபக்கம்,  ஐந்துமுறை தொடர்ந்து ஆட்சியை பிடித்தாலும் மண்ணின் மைந்தரான மோடி பிரதமராக வந்த பிறகும் அது தொடர்கிறதா பார்ப்போம் என காங்கிரஸ் சவால் விட்டது.  இப்படிப்பட்ட அம்சங்களால், மோடிக்கு குஜராத் சட்டமன்ற தேர்தல் கௌரவ பிரச்சினையாகவே மாறிப்போனது.. அத்துடன், ஒன்றரை வருடத்தில் வரப்போகிற மக்களவை தேர்தலுக்கு மோடி பிராண்ட் விளைச்சல் அமோகமாக இருக்க, இதுதான் விதை நெல்லாகவும் கருதப்பட்டது..

அதனால்தான் குஜராத் தேர்தலை மனதில் வைத்து கடந்த ஓராண்டாகவே மோடி பல காரியங்களை அதிரடியாக செய்து வந்தார்.. எல்லாவற்றையும்விட முக்கியமான இரண்டு பிரம்மாஸ்திரங்கள் ஏவப்பட்டன..அதில் ஒன்று குஜராத் நர்மதா ஆற்றின் குறுக்கே பிரமாண்டமாய் கட்டப்பட்ட நர்மதா சர்தார் சரோவர் அணை..

1961 ஆம் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டு பின்னர் பல்வேறு தடைகள் ஏற்பட்டு 56 ஆண்டுகளாய் கட்டப்பட்டு வந்த அணையை, கடந்த செப்டம்டர் மாதம் 17-ந்தேதி தனது பிறந்த நாளன்று திறந்துவைத்தார் பிரதமர் மோடி..

இன்னொரு அஸ்திரம், ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் செலவிலான மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில திட்டதிற்கு அடிக்கல் நாட்டியது.. ஜப்பானிடம் கடன் வாங்கி மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் வட்டிக்குகூட கட்டாது என்று விமர்சனங்கள் எழுந்தாலும் இந்தியாவின் கௌரத்தை அதிகரிக்க புல்லட் ரயில் அவசியம் என்று சொன்ன நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தலுக்கு சிலமாதங்களே உள்ள நிலையில், நாட்டின் முதல் புல்லட் ரயிலை குஜராத்திற்கு அர்ப்பணிப்பதாக சொன்னார்.

இந்த பிரம்மாஸ்திரங்கள் குஜராத் வாக்காளர்களை குளிர்வித்து வெகுசுபலமாக 2014ல் நடந்ததை கணக்கில் வைத்து 150 ப்ளஸ் கிடைத்துவிடும் என மோடி எதிர்பார்த்தார்.. ஆனால் நடக்க ஆரம்பித்ததோ வேறு விதமாக..

பப்பு, சொப்பு என்றெல்லாம் சின்னக்குழந்தைக்கு ரேஞ்சுக்கு பாஜக தலைவர்களால் விமர்சிக்கப்பட்ட ராகுல்காந்தி, திடீரென ஆளே மாறிப்போய் அரசியல் களத்தில் வேகம் பிடித்தார். மோடிக்கு எதிராக பல கேள்விக்கணைகளை மாறிமாறி தொடுத்தார்..

பண மதிப்பிழப்பால் கிடைத்த நன்மைகள், ஜிஎஸ்டி தந்த வெற்றிகள் என பேசிவந்த பிரதமர் மோடி அந்த விஷயங்களை அப்படியே கீழே போட்டார். சரி குஜராத் மாடல் வளர்ச்சி என்று நாடு முழுக்க சொல்லிவருகிறாரே அதையாவது குஜராத்திலேயே சொல்லுவார் என்று பார்த்தால், அதுவும் நடக்கவில்லை..

வளர்ச்சி, வளர்ச்சி என்று சொல்லி வந்த பாஜக, அலாவுதீன் கில்ஜி என ஆரம்பித்து ராகுல்காந்தி சுத்தமான இந்துவா என்றெல்லாம் கேட்டு டிராக் மாறி ஓடியது..

‘’இந்திரா காந்தியின் கணவர் பார்சி என்பதால் ராஜீவ்காந்தியே பாதி இந்து-பாதி பார்சி.. அவரோடு இத்தாலி கிறித்துவரான சோனியா கலந்து பிறந்த ராகுல் காந்தி எப்படி 100 சதவீத இந்துவாக இருக்கமுடியும்?’’ என்று ராகுலின் பரம்பரையையே போஸ்ட் மார்ட்டம் செய்கிற அளவுக்கு பாஜக போனது…

உத்திரப்பிரதேச முதல்வரான யோகியோ, இந்து என்று சொல்லிக்கொள்ளும் ராகுல் காந்திக்கு கோவில் எப்படி அமர்வது என்பதுகூட தெரியவில்லை என்றார்.

வளர்ச்சி, வளர்ச்சி என பேசும் பாஜக, அடியோடு மாறி, நேரு குடும்ப ஆதிக்கம்.. நேரு குடும்ப ஆதிக்கம் என ஒரே பாட்டை பாடியது.

இம்முறை குஜராத் சட்டமன்ற தேர்தலில் வெற்றி என்பது அவ்வளவு சுலபத்தில் இல்லை என்பது லேசாக பொறிதட்ட ஆரம்பித்ததின் விளைவே இதெல்லாம். இதனால்தான் குஜராத்தில் சுற்றிச்சுற்றி வந்து உச்சட்ட லெவலில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்ய நேரிட்டது.

2012 தேர்தலில் ஐந்தாவது முறை ஆட்சியை பிடிக்கும் முயற்சியின் போதும் குஜராத் மாடல் வளர்ச்சியை பெரிதாக பேசாத மோடி, ஷோராபுதின் என்கவுண்ட்டர் என ஆரம்பித்து தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஓயமாட்டோம்..ஒயமாட்டோம் என்று டாப்பி கியர் போட்டு அந்த ரூட்டில் மட்டுமே மக்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் வகையில்  பிரச்சாரத்தை கொண்டுபோனார்..

இப்போது 2107 தேர்தலில் ராகுல் இந்துவா, நேரு பரம்பரைதான் நாட்டை ஆளணுமா என்றுதான் மக்கள் மனதில் உணர்ச்சிகளை கிளப்ப ரூட்டை எடுத்தாரே தவிர, வளர்ச்சியை முன்நிறுத்தவில்லை.. பிரச்சாரத்தின்போது அவ்வப்போது ஊறுகாய் மாதிரி பட்டும் படாமலுமே மோடியின் வாயில் வந்துபோனது..

மோடி தரப்பு பயந்தமாதிரியே அடிபட்டு மிதிபட்டுத்தான் இம்முறை குஜராத்தில் பாஜக கரை சேர்ந்துள்ளது.. முன்னணி நிலவரத்தின்போது இரண்டு மூன்று முறை காங்கிரஸ் முந்திய போது பாஜக வட்டாரமே அதிர்ந்துபோனது.. மும்பை பங்குச்சந்தை 860 புள்ளிகள் மளமளவென சரிந்தது..

கடைசியில் அப்படியும் இப்படியும்போய் பெரும்பான்மை இலக்கை பாஜக ஒருவழியாக எட்டிவிட்டது. இருப்பினும் அமைச்சர்கள் நான்கு பேர் மற்றும் சட்டசபை சபாநாயகர் என முக்கிய தலைகள் தேர்தலில் உருண்டதெல்லாம் அதற்கு ஏற்பட்ட வெளிக்காயங்கள்..

ஆனாலும், ‘’நாங்கள் காட்டிய வளர்ச்சிக்கு மக்கள் தந்த அங்கீகாரம்தான் தேர்தலில் எங்களுக்கு‘’ கிடைத்த வெற்றி என்கிறார் மோடி..

எது எப்படியோ, குஜராத்தில் வெற்றி பெற்றதோடு காங்கிரசிடமிருந்த ஹிமாச்சல பிரதேசத்தையும் கைப்பற்றியதன் மூலம் மொத்தமுள்ள 29 மாநிலங்களில் 19 மாநிலங்கள் பாஜக வசமாகியுள்ளது..இது உண்மையிலேயே மலைக்கவைக்கும் சாதனை..

சுதந்திரம் வாங்கித்தந்ததை காட்டி காங்கிரஸ் ஆரம்பத்தில் பெரும்பாலன மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தியதைபோல இப்போது பாஜகவின் ஆதிக்கம்.. காங்கிரசிடம் தற்போது நான்கு மாநிலங்கள் மட்டுமே உள்ளன அதிலும் பெரிய மாநிலங்கள் என்றால் பஞ்சாப், கர்நாடகா மட்டுமே

அடுத்த ஆண்டு ராஜஸ்தான், மத்தியபிரதேசம் என பல மாநிலங்களுக்கு தேர்தல் நடக்கப்போகிறது.. புதிதாக வெற்றி என்பதைவிட தக்கவைக்கவே இனி பாஜக அதிகம் போராடவேண்டும்.

காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் ஆன மூன்றாவது நாளே குஜராத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னால் உள்ள புள்ளி விவரங்கள், ராகுல் காந்திக்கு பெரும் உற்சாகத்தைதான் கொடுத்திருக்கும்..

மக்களவை தேர்தல் 2019 என்றால் அதற்கு முந்தைய 2018 ஆம் ஆண்டு, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டுக்குமே 24 மணிநேர மல்யுத்த மைதானம்தான்..