கனடா நாட்டின் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அந்நாட்டின் நியூ டெமாக்ரடிக் கட்சியும், ப்ளாக் க்யுபெக்கா கட்சியும் கிங் மேக்கர்களாக மாறும் வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கனடாவில் ஒவ்வொரு தேர்தலின் போதும், கட்சித் தலைவர்கள் நாடு முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவதோடு, தொலைக்காட்சி நேரலையில் மக்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு ஒன்றாக அமர்ந்து பதிலளிப்பதோடு, தங்களுக்குள்ளாகவே விவாதம் செய்யும் நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதுவரை 40 நாட்களுக்கான பிரச்சாரம் முடிவுற்ற நிலையில், தற்போது இவற்றை அடிப்படையாக கொண்டு கனடாவை சேர்ந்த முன்னணி ஊடகங்கள் சார்பிலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

கனடா நாட்டு அரசின் நிதியுதவியோடு இயங்கும் அந்நாட்டின் மிகப்பெரிய தொலைக்காட்சி மற்றும் மின்னணு ஊடகமான சி.பி.சி, இணையம் மூலம் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பின் படி, ஜஸ்டினின் லிபரல் கட்சி 137 தொகுதிகளையும், ஆண்ட்ரூ ஷீர் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 125 இடங்களையும், ப்ளாக் க்யுபெக்கா கட்சி 39 இடங்களையும், நியூ டெமாக்ரட்டிக் கட்சி 34 இடங்களையும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் ஆட்சி அமைக்க 170 தொகுதிகள் தேவை என்கிற நிலையில், எந்த கட்சியும் பெரும்பான்மை பெற வாய்ப்பில்லை என்று இக்கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

அதைப்போலவே, ஐபாலிடிக்ஸ் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில், லிபரல் கட்சியும், நானோஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் கூட்டு கருத்துக்கணிப்பில் கன்சர்வேட்டிவ் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன. எனினும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, எந்த கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்பு வெளியாகவில்லை.

மேற்குறிப்பிடப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை வைத்து பார்க்கும்போது, லிபரல் அல்லது கன்சர்வேட்டிவ் கட்சி கிட்டத்தட்ட 130 தொகுதிகளில் வெற்றிபெற்றால், அவற்றில் எது ஆட்சியமைக்கும் என்பதை இந்த தேர்தலில் மூன்றாவது இடத்தை பெறப்போகும் கட்சியே நிர்ணயிக்கும். அதனால் நியூ டெமாக்ரட்டிக் மற்றும் ப்ளாக் க்யுபெக்கா ஆகிய கட்சிகள் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது. இதன் மூலம் இரு கட்சிகளும் கிங் மேக்கர்களாக உருவாகும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.