சென்னை: ரஜினி  அரசியலுக்குள் வருவதை வரவேற்பதாக தெரிவித்துள்ள துணைமுதல்வர் ஓபிஎஸ், வரும் காலத்தில் ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

அரசியல் கட்சி தொடங்குவதாக  கூறி 3 ஆண்டுகளை கடந்த நிலையில், இன்றுதான் கட்சியை தொடங்கப்போவதாக ரஜினி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதன்படி,  தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டியது  கட்டாயம் என்றும், ஜனவரியில் கட்சியை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்ததுடன்,  தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது என்றும் அதிரடியாக அறிவித்தார்.

ரஜினியின் அரசியல் கட்சி  அறிவிப்புக்கு அரசியல் கட்சியினர்  வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஸ்டாலினின் சகோதரர், மு.க.அழகிரி  ரஜினிக்கு வாழ்த்துதெரிவித்துள்ளார். மேலும்,  அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதை வரவேற்கிறேன் என்று சொன்னவர், அவரது வரவு நல்வரவாகட்டும் என்றும் சொன்னார்.அதிமுகவுடன் ரஜினி கட்சி கூட்டணி வைக்குமா? என்ற கேள்விக்கு, அரசியலில் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்றும், வரும் காலத்தில் சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது  பதில் அளித்துள்ளார்.

ரஜினி  கட்சியுடன் கூட்டணி அமைக்கும் வகையில் ஓபிஎஸ் இப்போதே அச்சாரம் போடும் வகையில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் பேட்டியை நான் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என்று சொன்ன முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பின்னர், ரஜினிகாந்த் கட்சி தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பிறகு அதைப்படித்துவிட்டு கருத்து தெரிவிக்கிறேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.