பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு! நீங்களும் ‘டெட்’ எழுதி ஆசிரியராகலாம்…..

சென்னை:

பொறியியல் படிப்பு  (பி.இ.) படித்தவர்களும் டெட் தேர்வு எழுதி ஆசிரியராக பணியாற்றலாம் என்று தமிழக அரசு, அரசாணை பிறப்பித்து உள்ளது.

பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் இனி 6 முதல் 8 வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு கணக்கு ஆசிரியர் ஆகலாம், என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

நாடு முழுவதும் பொறியியல் படிப்புக்கு பெருத்த வரவேற்பு கிடைத்த நிலையில், தமிழகத்திலும் லட்சக்கணக்கானோர் பொறியியல் படித்து பட்டம் பெற்று, அதிக சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படித்தவர்களுக்கு சரியான வேலை கிடைக்காத நிலையில், மாணவ மாணவிகளிடையே பொறியியல் மோகம் குறைந்து வருகிறது.

இந்த நிலையில், பொறியியல் படித்துள்ள லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேலைவாய்ப் பின்றி, சுவிக்கி, ஷொமட்டோ போன்ற நிறுவனங்களில் இணைந்து குறைந்த சம்பளத்தில்  உணவு சப்ளை செய்து, காலத்தை ஓட்டி வருகின்றனர்.

தமிழகத்தில், பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஆசிரியர்கள் பணிக்கு டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வேலையை தேர்ந்தெடுக்கும் நோக்கில்  ஏராளமான  பொறியியல் பட்டதாரிகள் பிஎட் படித்து, டெட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் இனி டெட் எனும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. பி.இ பட்டப்படிப்புகளில் எந்த பிரிவில் பயின்றிருந்தாலும் இந்த டெட் தேர்வை எழுதலாம் என்றும் கூறி உள்ளது.