விஷாலுக்கு எதிர்ப்பு….தயாரிப்பாளர் சங்க கூட்டம் பாதியிலேயே நிறுத்தம்

சென்னை:

சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொது குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் சேரன் தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

கூட்டத்தில் இருந்து சேரன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் வெளிநடப்பு செய்தனர். கூட்டம் நிறுத்தப்பட்ட நிலையில் நடிகர் டி. ராஜேந்தர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கூட்டம் மிகவும் தாமதமாக தொடங்கியது. நிர்வாகிகள் இல்லாமலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. புகார் தெரிவிக்க மைக்கை வழங்க வில்லை. சங்க விதிகளின்படி விஷால் செயல்படவில்லை.

ஆர்.கே. நகர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தது ஏன்? என்ற கேள்விக்கு விஷால் இது வரை பதில் அளிக்கவில்லை. அரசை விஷால் எதிர்த்து உள்ள நிலையில் மானியம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சங்க நிதி கணக்கை விஷால் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்றார்.