மகாராஷ்டிரா; மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு வலுக்கிறது

டில்லி:

மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். .

மனித உரிமை ஆர்வலர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள் 5 பேரை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கைது செய்யப்பட்ட 5 பேரையும் வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டனர்.

இந்த கைது சம்பவத்துக்கு நாடு முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்த எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததி ராய், வக்கீல் பிரசாந்த் பூ‌ஷண், சமூக ஆர்வலர்கள் அருணா ராய், ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் டில்லியில் பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில்,‘‘இது சட்டவிரோத கைது நடவடிக்கை. முறையான நடைமுறைகளை மீறிய செயல். சட்ட அமைப்பை அவமதிக்கும் செயல். இது ஒரு தீய மற்றும் தவறான நோக்கமுடைய தாக்குதல். இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்ட மகாராஷ்டிரா போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், லேப்டாப்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.