குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு : அசாமில் கடும் வன்முறை

வுகாத்தி

சாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் நடந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியில் துன்புறுத்தப்பட்டு இந்தியாவில் குடி பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.   அதையொட்டி  தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவில் சட்டவிரோதமாகக் குடிபுகுந்தோரில் இந்துக்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள்,  பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் பார்சிகளுக்குக் குடியுரிமை வழங்க உள்ளது.

இதில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படாதது குறித்து எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.   அது மட்டுமின்றி அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  இந்த மாநிலங்களில் வங்க தேசத்தில் இருந்து ஊடுருவிய வங்காளிகள் ஏராளமாக வசித்து வருகின்றனர்.

இவர்களுக்குக் குடியுரிமை அளித்தால் அங்கு வாழும் பூர்வ குடி மக்கள் தங்கள் பாரம்பரியம் மற்றும் பெரும்பான்மை  பாதிக்கப்படும் என அஞ்சுகின்றனர்  எனவே இவர்கள் இந்த சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  குறிப்பாக அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் சில்புகுரி, சந்தமாரி, லசித் நகர், ஜிஎஸ் சாலை, ஹதிகான் ஆகிய பகுதிகளில் நடந்த  போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.

இதனால் கவுகாத்தி நகர் விமான நிலையத்தில் வந்து இறங்கிய பயணிகள் அங்கிருந்து வெளிவர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.  விமான நிலையத்தில் இருந்து நகரின் மையப்பகுதி வரை பல வாகனங்கள் மீது கடும் கல்வீச்சு தாக்குதல் நடந்துள்ளது.  அசாம் மாணவர் சங்கம் மற்றும் பாடகர் ஜுபீன் கர்க் நடத்திய  போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

போராட்டம் கடுமையாகி வருவதால் மாநிலத்தில் பல இடங்களில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.    இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது இது குறித்து கவுகாத்தி நகரத் தொழிலதிபர் சிலாபாத்ரா, “காஷ்மீரில் செய்ததைப் போல் இங்கும் இணைய சேவையை முடக்கி உள்ளனர்.  ஆனால் நாங்கள் காஷ்மீரிகளைப்போல் அமைதியாக இருக்க மாட்டோம்.  டில்லி அரசு எப்போதும் சர்வாதிகாரம் செய்ததில்லை.  இனியும் அவ்வாறு நடக்க விடமாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

நகரின் மற்ற பகுதிகளான ஹதிகாவ், சில்புகுரி, லசித் நகர், சந்தமாரி, கிரிஸ்டியன் பஸ்தி, பல வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.   ஜி எஸ் சாலை மற்றும் ஜிஎன்பி சாலைகளில் டயர்கள் மற்றும் சாலைப் பிரிவுகள்  எரிக்கப்பட்டுள்ளன.  கல்லெறி சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதால் அங்கு கடும்  பதட்டம் ஏற்பட்டுள்ளது.  அதன் பிறகு காவல்துறையினர் வானத்தை நோக்கிச் சுட்டும் கண்ணீர் குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களைக் கலைத்துள்ளனர்.