எதிர்க்கட்சி தலைவரே போராட்டத்தை தூண்டுகிறார்!: மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
சென்னை,
தமிழகத்தில் கடந்த வாரம் பேருந்து கட்டணம் திடீர் என உயர்த்தப்பட்டது. இதற்கு பொதுமக்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கல்லூரி, பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசியல் கட்சியினரும தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பேருந்து கட்டணமும் கொஞ்சம் குறைக்கப்பட்டு இன்று முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், எதிர்க்கட்சி தலைவரே போராட்டத்தை தூண்டி விடுகிறார் என்று குற்றம்சாட்டி உள்ளார்.
கேள்வி:- பஸ் கட்டணம் மிக குறைவான அளவிலேயே குறைக்கப்பட்டிருப்தால் பயன் இல்லை என்று கூறப்படுகிறதே?
பதில்:- இக்கட்டான சூழ்நிலையிலும் 7 வருடங்களாக பஸ் கட்டணத்தை அதிமுக அரசு உயர்த்தாமல் சமாளித்து வந்தோம்.. ஆனால், தற்போது இதுவரை இல்லாத அளவில் டீசல் விலை, உதிரி பாகங்களின் விலை உயர்ந்துள்ளது. அதுபோல போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் சம்பளம் உயர்த்தப்பட்டு உள்ளது.
மேலும, ஒரு நாளைக்கு ரூ.9 கோடி ரூபாய் நஷ்டத்தை தமிழக போக்குவரத்து துறை சந்தித்து வந்தது. இதுபோன்ற காரணங்களால்தான், வேறு வழியின்றி மன வருத்தத்துடன் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு அரசு தள்ளப்பட்டது என்றார்.
தற்போது பஸ் கட்டணம் உயர்த்தியும் நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி நஷ்டம் ஏற்பட்டு வந்தது. ஆனால், பஸ் கட்டணத்தை குறைக்க பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் வேண்டுகோளை ஏற்று, தற்போது கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாகவும் அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.4 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. வருடத்துக்கு ரூ.600 கோடி அளவில் மக்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.
இது மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் பஸ் கட்டணம் மிக மிக குறைவு.
கேள்வி:- ‘பஸ் கட்டணம் குறைக்கப்பட்டாலும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்’ என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாரே?
பதில்:- தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருப்பவரே இதுபோல போராட்டத்தை தூண்டிவிடலாமா?
மு.க.ஸ்டாலினின் இந்த செயல் எந்த விதத்திலும் நியாயம் ஆகாது. அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்ட சூழ்நிலையிலும் கூட ஏற்கனவே அறிவித்த மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
ஆனால், கடந்த ஒரு வருடமாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் ஸ்டாலினின் செயல்பாடுகளை பார்க்கும் போது, அதிமுக அரசை கலைக்க முயற்சித்து வருவது தெரிய வருகிறது. அவருக்கு ஆட்சி கட்டிலில் ஏற ஆசை. ஆனால், அவரது நப்பாசை, பகல் கனவாகவே மாறும்.
ஏற்கனவே, சட்டசபையில் கூட ஒரு நாடகம் அரங்கேற்றினார், ஆனால் அதிலும் தோல்வி அடைந்தார். பல கட்சிகளை ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள், அதிலும் தோல்வி அடைந்தார். மு.க.ஸ்டாலின் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார். அரசியலை பொறுத்தவரையிலே மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் யாராக இருந்தாலும் ஒரு பரந்த மனப்பான்மை வேண்டும்.
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிதான் நடைபெறும்.. நாங்கள் தான் ஆட்சி நடத்துவோம். பட்ஜெட் போடுவோம். அதற்கு பிறகு நடக்கும் தேர்தல்களிலும் மக்களை சந்தித்து வெற்றி பெறுவோம்.
இவ்வளவு பெரிய நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழ்நிலையிலும் கூட, அரசு சாமர்த்தியமாக செயல்பட்டு வருகிறது என்றும், அதற்கு ஸ்டாலின் ஆலோசனை கொடுக்க முன் வராமல் அரசை கவிழ்க்க முயற்சித்து வருவதும், அரசு கவிழ்ந்துவிடும் என்ற அவரது நப்பாசை ஒரு நாளும் நிறைவேறாது. அவரது தவறான நினைப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது. அதை கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.