டெல்லி:

சிஏஏக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேவ் இந்தியா என்ற கோஷங்களுடன்  நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

2020ம் ஆண்டின் பாராளுமன்ற முதல் கூட்டம் இன்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து நாளை பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

முன்னதாக இன்று பாராளுமன்றம் வந்த காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராகவும், இந்தியாவை காப்பாற்று என்ற கோஷங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவரும், காங்கிரஸ் எம்.பி. யுமான சோனியா காந்தி தலைமை தாங்கினார்.  நாடாளு மன்றத்தில் வளாகத்தில்  காந்தி சிலை முன்பு  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.