எதிர்க்கட்சி தலைவர்களைக் காஷ்மீருக்குள் வர அனுமதிக்க வேண்டும் : ஐரோப்பியக் குழு உறுப்பினர்

ஸ்ரீநகர்

காஷ்மீர் வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு உறுப்பினர் நிகோலஸ் ஃபெஸ்ட் எதிர்க்கட்சி தலைவர்களை மாநிலத்தில் அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

விதி எண் 370 விலக்கப்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தைக் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது.  அத்துடன் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  தொலைப்பேசி, இணையம் ஆகியவை முடக்கப்பட்டு அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அங்குள்ள நிலைமை குறித்து நேரில் கண்டறியச் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட பல தலைவர்களைக் காஷ்மீர் மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.  இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தை நேரில் காண ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றக் குழு ஒன்று காஷ்மீருக்கு வந்துள்ளது.

இது சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு மாநிலத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட முதல் குழு ஆகும்.   இந்தக் குழு வலதுசாரி ஆதரவுக் குழு என முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அத்துடன் அந்த்க் குழுவைச் சுதந்திரமாக முன்னாள் முதல்வர்கள், பொதுமக்களைச் சந்திக்க அனுமதி உண்டா எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

அந்த குழுவில் உள்ள உறுப்பினரான நிகோலஸ் ஃபெஸ்ட், “ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நீங்கள் அனுமதிக்கும் போது எதிர்க்கட்சி தலைவர்கள் போன்ற அரசியல் வாதிகளையும் அனுமதிக்க வேண்டும்.  இதில் ஏதும் பிரச்சினைகள் இருப்பின் அதை இந்திய அரசு களைய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.