சென்னை:

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மறுத்த அரசை கண்டித்து, திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டமன்றத்தின் 2வது நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அதையடுத்து, மறைந்த முன்னாள் சபாநாயகர் பிஎச்பாண்டியன் உள்பட மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சபை 14 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டு, மீண்டும் கூடியது.

அப்போது, சபையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.  ஆனால், சபாநாயகர் திமுகவின் மனு ஆய்வு உள்ளதாக கூறி, அவரது கோரிக்கையை  ஏற்க மறுத்துவிட்டார். அப்போது குறுக்கிட்ட திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான துரைமுருகன், தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் என்ற பொன்னான வார்த்தையை சபாநாயகர் சொல்லிவிட்டால் நாங்கள் திருப்தியடைவோம்  என்றார். ஆனால், அதையும் சபாநாயகர் ஏற்க மறுத்து விட்டார்.

இதையடுத்து சபையில் இருந்து ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அவரைத் தொடர்ந்து கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் உள்பட மற்ற கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னத் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், பாஜக அரசு கொண்டு வந்துள்ள சட்டம் ஒருமைப்பாட்டிற்கு உகந்தது அல்ல, ”குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென நான் வைத்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்து விட்டார் என்றும்,  பாஜகவுக்கு சேவகம் செய்யும் அடிமை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

பிஜேபி ஆளும் அசாம் மாநிலத்திலேயே குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறியவர்,
தமிழகத்திலும் குடியுரிமை சட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், மீண்டும் மீண்டும் சட்டப்பேரவையில் இந்த பிரச்சனையை எழுப்பி பேசுவோம் என தெரிவித்தவர், இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகள் இணைந்து செயல்படுவோம்  என்றும் கூறினார்.