எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை:

திர்க்கட்சிகள்  எப்போதும் அரசை  குறை சொல்லாமல்  ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தமிழகத்தில் பேரழிவை ஏற்படுத்திச் சென்றுள்ள கஜா புயல் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. மற்ற மாவட்டம் மற்றும் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாவட்டங்களின் உள்பகுதிகளில் இருக்கும் பல கிராமங்களுக்கு இன்னும் நிவாரணங்கள் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் போராட்டம் நடத்த தூண்டப்பட்டு, பல இடங்களில் அதிகாரிகளை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதிகளுக்கு செல்ல அதிகாரிகள் தயக்கம் காட்டுவதை தொடர்ந்து நிவாரண பணிகள் தடை பட்டு வருகின்றன. இதுபோன்ற செயல்களை எதிர்க்கட்சிகள் தூண்டி வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  அரசின் நடவடிக்கையை எப்போதும் குறை சொல்லாமல் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று கூறினார். முதல் நாளில் பாராட்டிவிட்டு, அடுத்த நாள் ஆட்சியை குறைகூறுவதுமு சரியல்ல.

கஜா புயல் சேதம் குறித்து பார்வையிட சென்ற முதல்வர்,   தனது சொந்த பிரச்சனைக்காக  ஹெலிகாப்டரை பயன்படுத்தவில்லை என்றும, மக்கள் பிரச்சனைக்காகத்தான் ஹெலிகாப்டரை பயன்படுத்தினார்.

எதிர்க்கட்சிகள் எப்போதும்  எதிரி கட்சிகளாக இருக்கக் கூடாது. எப்போதும் குறை சொல்லாமல் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.  கஜா புயல் நிவாரணப்பணிகளில் எந்த தொய்வும் ஏற்படவில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஓரிரு நாளில் இயல்பு நிலை திரும்பி விடும்.

தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்சேதம் பெருமளவு தவிர்க்கப் பட்டுள்ளது. சுனாமி தாக்குதலை விட கஜா புயலால் ஏற்பட்ட சேதம் அதிகமாக உள்ளது.  புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழகத்திற்கு உடனடியாக மத்திய குழுவை அனுப்புவது, பிரதமர் தமிழகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது.

தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு அளிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.