டில்லி

ராஜ்யசபையில் நடந்த ஒரு விவாதத்தில் எதிர்க்கட்சியினர் டில்லி முதல்வரை ஆதரித்தும் டில்லி ஆளுனரை விமர்சித்தும் பேசி உள்ளனர்.

ராஜ்யசபையில் டில்லி சட்டமன்றத்துக்கான விசேஷ சட்ட  சீர்திருத்தம் பற்றி விவாதிக்கப்பட்டது.   அப்போது   டில்லி ஆளுனர் அனில் பைஜாலின் போக்கை எதிர்க்கட்சியினர்  கடுமையாக விமர்சித்தனர்.

விவாதத்தில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, “நரேஷ் அகர்வால், “டில்லி அரசுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை.   டில்லி ஆளுனர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஒரு பணியாள் போல நடத்துகிறார்” எனக் குறிப்பிட்டார்.

திருணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் நதிமுல் ஹக், “மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு நடக்க ஏன் அனுமதிப்பதில்லை?  டில்லி கவர்னர் ஒரு சர்வாதிகாரியாக விளங்குகிறார்.  இதை மாற்ற ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?”  எனக் கேள்விகள் எழுப்பினார்.   மேலும் டில்லி மெட்ரோவின் புதிய சேவை துவக்க விழாவுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைக்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி ராஜா “இந்த கருத்து வேற்றுமை தொடர இன்னும் எத்தனை காலம் அனுமதிப்பது?  இது டில்லியில் மட்டும் அல்ல.  புதுச்சேரியிலும் இதே நிலைமைதான் உள்ளது.  நாம் இது குறித்து உடனடியாக ஒரு தீர்வு காண வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஹர்தீப் பூரி, “மெட்ரோ ரெயிலின் அந்தப் பிரிவு டில்லிக்கானது அல்ல.  உத்திரப் பிரதேச மாநிலத்துக்கானது.   அதனால் அந்நிகழ்வுக்கு யோகி ஆதித்யநாத் மட்டும் அழைக்கப்பட்டார்.   அரவிந்த் கெஜ்ரிவால் அழைக்கப்படவில்லை” என கூறினார்.