50% வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகைச் சீட்டை இணைக்க உச்ச நீதிமன்றத்தை அணுக எதிர்கட்சிகள் முடிவு

புதுடெல்லி:

தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டை, 50% வாக்குப் பதிவு இயந்திரங்களில் இணைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

காங்கிரஸ், தெலுங்கு தேசம், சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், தேர்தல் நடவடிக்கையில் வெளிப்படைத் தன்மை, வாக்காளர்களின் உரிமையை நிலைநாட்டுவது மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க அழைப்பு விடுப்பது ஆகியவை முக்கிய அம்சங்கள் என தெரிவிக்கப்பட்டது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசும்போது, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் வகையில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பாஜகவினர் புரோக்ராம் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

குறைந்தது 50% வாக்குப்பதிவு இயந்திரங்களிலாவது ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும் என அனைத்து எதிர்கட்சிகளும் ஒருமித்த குரல் எழுப்பின.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் கவனத்துக்கு ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு கொண்டு சென்றார்.

50% வாக்குப் பதிவு இயந்திரங்களில் யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான ஒப்புகைச் சீட்டை இணைக்க உத்தரவிடக் கோரி மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகவுள்ளதாக செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.