வாக்குச் சீட்டு முறைக்கு தேர்தலை மாற்ற கோரும் எதிர்க்கட்சிகள்

டில்லி

மின்னணு வாக்குப்பதிவுக்கு மாற்றாக வாக்குச் சீட்டு முறைக்கு மாற்ற எதிர்க்கட்சிகள் கோரிக்கை இட திட்டமிட்டுள்ளன.

தற்போது இந்தியாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு முறை பின்பற்றப்படுகிறது.    எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.    பல முறை  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்யப்பட்டு பாஜக வெற்றி பெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன.

நேற்று முன் தினம் எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒன்று டில்லியில் நடை பெற்றது.   காங்கிரஸ் கட்சி அழைப்பின் பேரில் இந்த கூட்டத்தில் திருணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்,  திமுக,  ராஷ்டிரிய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள் மற்றும் மஜத ஆகிய கட்சிகள் கலந்துக் கொண்டன.   பாராளுமன்ற மழைக்காலத் தொடரின் போது இந்தக் கட்சிகள் நடந்துக் கொள்ள வேண்டிய முறை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது,

அப்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் விவகாரம் குறித்தும் விவாதிக்கpபட்டுள்ளது.   காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத்  உலகில் உள்ள 17 நாடுகளில் மின்னணு வாக்குப் பதிவு முறை கைவிடப்பட்டுள்ளதை தெரிவித்தார்.   அத்துடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும்  மின்னணு வாக்குப் பதிவு முறையை மாற்ற வேண்டும் எனக் கூறி உள்ளார்,

மஜத சார்பில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒரு சில மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்தது தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டது.   காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அகமது படேல் பேசுகையில் தாம் சில தொழில்நுட்ப வல்லுனர்களை கேட்ட போது வாக்களிப்பு இயந்திரத்தில் மோசடி செய்வது எளிது என தெரிவித்ததாக கூறினார்.

அதை ஒட்டி வரும் பாராளுமன்ற மழைக்காலத் தொடரின் போது ”மின்னணு வாக்குப் பதிவு இயந்திர உபயோகத்தை நிறுத்த வேண்டும். வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு அனைத்துக் கட்சிகளும் இணைந்து கோரிக்கை வைக்க வேண்டும்” என தீர்மானிக்கப் பட்டுள்ளது,