அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க எதிர்க்கட்சி முயற்சி! எடப்பாடி ஆவேசம்

சென்னை:

மைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க எதிர்க்கட்சி முயற்சி செய்து வருகிறது என்று சிஏஏ தொடர்பான  விவாதத்தில் எடப்பாடி ஆவேசமாக பேசினார்

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறியவர், யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் சொல்லுங்கள் நான் பதில் சொல்கிறேன் என்றும் ஆவேசமாக கூறினார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதம் இன்று 2வது நாளாக நடைபெற்று வருகிறது. காரசாரமாகவும், நகைச்சுவையாகவும் நடைபெற்ற விவாதத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்களும், முதல்வரும் பதில் அளித்து வருகின்றனர்.

இன்றைய விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை  சட்டத்திருத்தத்தால,  சிறுபான்மையின மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் குடியுரிமைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். தமிழகத்தில் மட்டும் சிஏஏ சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  தமிழகத்தில் சில கட்சிகள் சிஏஏ தொடர்பாக போராட்டங்களை தூண்டி வருவதாக குற்றம் சாட்டியவர்,  குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது, இந்த விவகாரத்தில்  மாநில அரசால் எதுவும் செய்ய முடியாது

தவறான தகவல்களால் தான் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றும் கூறினார். மேலும், இந்த சட்டத்திருத்தத்தால் சிறுபான்மையினருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளித்தவர்,  சிஏஏவால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுபான்மையினரை தமிழகத்தில் காட்ட முடியுமா என எதிர்கட்சியினருக்கு ஆவேசமாக சவால் விடுத்தார்.  அவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை சுட்டிக்காட்டுங்கள், அதற்கு பதிலளிக்கிறேன் என்றும் முதலமைச்சர் கூறினார்.

CAA விவகாரத்தை சொல்லி சொல்லி மக்களை ஏமாற்றி தவறான தகவலை பரப்பி, அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க எதிர்க்கட்சி முயற்சிப்பதாக குற்றம்சாட்டிவர்,  குடியுரிமைச் திருத்தச் சட்டம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது என்றும், அதனை திரும்ப பெறும் அதிகாரம் தங்களிடம் இல்லை எனவும் முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.