வேளாண் மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் அமளி, அவை தலைவர் மைக் உடைப்பு

டெல்லி: வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட, அவை ஒத்தி வைக்கப்பட்டது.

மத்திய அரசின் வேளாண் துறை தொடர்பான வர்த்தக மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையில் 2 வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மசோதக்களின் மீதான விவாதத்தின் போது, இந்த சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது என்பதால் திரும்ப பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

ஆனால், கோரிக்கை குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டதாக கூறி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப் பகுதிக்கு வந்து, மசோதாவின் நகல்களை கிழித்து எறிய முற்பட்டனர்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ ப்ரையன், அவை துணை தலைவர் ஹரிவன்ஷ் மீது மசோதா நகலை கிழித்து வீசினார். ஹரிவன்ஷ் மேசையில் இருந்த மைக் உடைக்கப்பட்டது.  எதிர்க்கட்சிகளின் கடும் அமளியை அடுத்து மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.