டெல்லி: பேளூர் மடத்தில் பிரதமர் மோடி அரசியல் உரை நிகழ்த்தி இருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்திருக்கின்றன.

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா சென்றார். அப்போது சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மோடி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவுராவில் உள்ள பெலூர் மடத்தில் நடந்த விவேகானந்தர் ஜெயந்தி விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது குடியுரிமை சட்டம் குறித்து, எதிர்க்கட்சிகள் இளைஞர்களை தவறாக வழிநடத்துகின்றன என்றும் குற்றம்சாட்டினார்.

அவரது இந்த உரைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சிகள், பேளூர் மடத்தின் புனித நிலத்தில் தமது அரசியல் உரையை அவர் நிகழ்த்தி இருக்கக் கூடாது என்று கண்டித்துள்ளனர்.

காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இதுபற்றி கூறி இருப்பதாவது: ராமகிருஷ்ணா மிஷன், பேளூர் மடம் ஆகியவை உலகம் முழுவதும் ஒரு புனித இடமாக அறியப்படுகிறது. பிரதமர் மோடி தமது அரசியல் உரையை அங்கு நிகழ்த்தி இருக்கக்கூடாது. அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

இடதுசாரி பொலிட்பீரோ உறுப்பினர் முகமது சலீம் கூறுகையில், ராமகிருஷ்ணா மடம் மற்றும் மிஷனின் துறவிகள் பெலூர் மடத்தில் பிரதமர் மோடியின் அரசியல் உரையை கண்டிப்பார்கள் என்றார்.

எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பாஜக தேசிய செயலாளர் ராகுல் சின்ஹா, சிபிஐ (எம்) மற்றும் காங்கிரஸ் ஆகியவை இதுபோன்று தவறான கருத்துகளை பரப்புவதை நிறுத்த வேண்டும் என்றார்.

நாத்திகர்களின் கட்சியான சிபிஐ (எம்), பேளூர் விவகாரத்தில் எங்களுக்கு அறிவுரை கூறுகிறதா?  எது சரி, தவறு என்பது குறித்து எங்களுக்கு சொற்பொழிவு செய்ய சிபிஐ (எம்) மற்றும் காங்கிரசுக்கு உரிமை இல்லை என்றார்.