ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு: சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு பூட்டு போட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைது

சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடை பெற்று வரும் நிலையில், ஐபிஎல் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதை ஏற்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்து திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என்றும் அறிவித்தது.

ஏற்கனவே பல கட்சிகள் ஐபிஎல் போட்டியை  தமிழர்கள்  யாரும் பார்க்கக்கூடாது என்றும், ஐபிஎல் வீரர்கள் கடத்தப்படுவார்கள் , மைதானத்தில் புகுந்து போராட்டம் நடத்துவோம் என்றும் அச்சுறுத்தப்பட்ட நிலையில் சென்னையில் பரபரப்பும் பதற்றம் நீடித்து வருகிறது.

சென்னை சேப்பாக்கம் பகுதியில்  4 ஆயிரம் காவலர்கள் 5 அடுக்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள நிலையில், வீரர்கள் தங்கி உள்ள விடுதிகளிலும் பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த சிலர், சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே வந்து போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் கதவை இழுத்து பூட்டு போட்டனர். அப்போது போட்டியை புறக்கணிக்க கோரி கோஷமிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

You may have missed