சென்னை:

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.

உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டப்படும் என்றும், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்படும் என திமுக உள்பட எதிர்க்கட்சிகள், தமிழ் அமைப்புகள் அறிவிப்புகள் வெளியிட்டிருந்தன.

அதன்படி இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தின் வாசலில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதுபோல திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி வைத்துள்ளனர்.

திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வீட்டிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது

தமிழகம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகள், விவசாயிகள் தமிழர் அமைப்புகள் தங்களது அலுவலகம் மற்றும் வீடுகள், வணிக நிறுவனங்களில் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும், இன்று காலை 9 மணி அளிவல் இயக்குனர் பாரதிராஜா தலைமையிலான அமைப்பினர் சென்னை விமான நிலையத்தில் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவோம் என்றும் அறிவித்துள்ளனர்.

மேலும், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறும்போது, பிரதமர் மோடி சாலையில் சென்றாலும், வானில் சென்றாலும் அவருக்கு கருப்பு கொடி காட்டுவோம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.