கும்பகோணம்:

ரிவாயு குழாய் பதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் ராஜ் ஆகியோரை ஏற்கனவே கைது செய்துள்ள காவல் துறை யினர், தற்போது பேராசிரியர் ஜெயராமனின் மனைவி சித்ரா ஆகியோர் மீது பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணிஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டது.  இதன் காரணமாக  விவசாய நிலங்கள் பாழாகிவிடும் என்றும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விடும் என்று விவசாய சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

கதிராமங்கலம் கிராம மக்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். மேலும் கிராம மக்களின் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து   ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் பராமரிப்பு பணிகளை கடந்த சில மாதங்களாக நிறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் கதிராமங்கலம் கிராமத்தில், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் மீண்டும் பெட்ரோல் கிணற்றை பராமரிக்கும்  பணிகளை தொடங்கினர். இதையறிந்த அந்த பகுதி கிராமத்தில் அதிர்சி அடைந்து, அதிகாரிகளிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பரபரப்பு நிலவியது.

அதைத்தொடர்ந்து அங்கு வந்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் ஓஎன்ஜிசி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து காவல்துறையினர் அவரையும், ராஜ் என்பவரையும் கைது செய்தனர்.

இந்த நிலையில், ஓஎன்ஜிசியின்  பராமரிப்பு பணியினை தடுக்க முயன்றதாக அதே ஊரைச் சேர்ந்த ஜெயந்தி ,கலையரசி, மற்றும் பேராசிரியர் ஜெயராமனின் மனைவி சித்ரா ஆகியோர் மீது பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது அந்த பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.