டில்லி

பாஜக கூட்டணியில் இருந்து முழுவதுமாக விலகினால் மட்டுமே சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக மற்றும் சிவசேனா இடையிலான அதிகாரம் குறித்த சர்ச்சையால் அரசு அமையாமல் உள்ளது.   சிவசேனாவின் இரண்டரை வருட முதல்வர் கோரிக்கையை ஏற்க பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது.   எனவே பாஜகவுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க சிவசேனா தயங்கி வருகிறது.   அத்துடன்  காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிராச் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயன்று வருகிறது.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் முடிவு தெரிவிக்காத போதிலும் பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா முழுமையாக வெளியேறாத நிலையில் ஆதரவு அளிக்கத் தயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.   சிவசேனா கூட்டணி குறித்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சிவசேனாவுடன் காங்கிரஸ் ஒத்துப் போவதில் சந்தேகம் கொண்டுள்ள நிலையில் முந்தைய ஜனாதிபதி தேர்தல்களில் பிரதிபா பாட்டில் மற்றும் பிரணாப் முகர்ஜியைத் தேர்வு செய்ய சிவசேனா உதவியதை அவர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.   பால் தாக்கரே உயிருடன் இருந்திருந்தால் பாஜகவுக்கு சிவசேனாவின் கோரிக்கையை மறுக்கத் தைரியம் வந்திருக்காது என சரத் பவாரின் உறவினர் தெரிவித்ததையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதுள்ள நிலையில் சிவசேனாவுக்கு மத்திய அமைச்சரவையில் ஒரு அமைச்சர் பதவியை பாஜக அளித்துள்ளது.    எனவே மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலகினால் மட்டுமே எதிர்க்கட்சிகளால் கூட்டணி முறிந்தது என நம்ப முடியும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.   வரும் நவம்பர் 8 ஆம் தேதிக்குள் அரசு அமைக்காவிடில் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த நேரிடும்.

அதைத் தடுக்க அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்பதற்காக ஆளுநர் பாஜகவை அழைக்க நேரிடும்.  தற்போது சிவசேனாவின் ஆதரவு கேள்விக்குறியாக உள்ள நிலையில் சபாநாயகர் தேர்தலின் போதே அரசு கவிழும் நிலை உள்ளது.

மத்திய அமைச்சரவை பதவியா அல்லது மாநில ஆட்சியா என்னும் சிக்கலில் சிவசேனா உள்ளது.