சென்னை: 

பெரியாரை அவமதிக்கும் எந்தச் செயல்களையும் தமிழக மக்களோ, அதிமுகவோ ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் பிரச்சினைகளை உருவாக்கி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கலாம் என எண்ணும் ஒருசிலரின் எண்ணம் பலிக்காது என்று  அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், துணைஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக  அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பெரியார் சிலை அகற்றப்படும் என கருத்து பதிவிட்ட எச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் கடுமையான போராட்டங்களும், அரசியல் கட்சியினர் மட்டுமின்றி மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், அதிமுக சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

அதில், பெரியாரைப் பற்றி  பாஜக தேசிய செயலாளர்ச் எச்.ராஜா தெரிவித்த கருத்து ஒட்டுமொத்தத் தமிழகத்தையே கொந்தளிக்க வைத்து விட்டதுடன், இந்தியத் திருநாட்டையே அதிர வைத்துவிட்டது.

இதற்கு தமிழக்ததில் எழுந்துள்ள எதிர்ப்பு மூலம் பெரியாரை தமிழக மக்கள் எவ்வளவு உயிராக நேசிக்கிறார்கள் என்ற உண்மை உலகிற்கே தெரிந்து விட்டது.

பெரியார் இல்லாவிட்டால் திராவிடத்தின் எழுச்சியில்லை, தமிழகத்தின் வளர்ச்சி இல்லை என்பது, ஒரு சிலரைத் தவிர ஒட்டுமொத்தத் தமிழக மக்களும் ஏற்றுக் கொண்ட உண்மை.

அதிமுக எனும் வீரிய விருட்சத்திற்குள் பெரியாரும் இருக்கிறார் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம் என்றும், தமிழகத்தில் எப்படியாவது குழப்பம் விளைவித்து, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று கருதுவோரின் எண்ணம் என்றைக்குமே பலிக்காது.

இவ்வாறு அதிமுக சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.