சட்டசபையில் மெரினா கலவரம் குறித்து முதல்வர் பதில்! திமுக வெளிநடப்பு!!

--

சென்னை,

டந்த வாரம் நடைபெற்ற சென்னை கலவரம் குறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவை யில் விளக்கம் அளித்தார்.

அப்போது, மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசை திருப்ப சமூக விரோதிகள் முயற்சி செய்ததாக குற்றம் சாட்டினார்.

‘ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி மாணவர்கள், இளைஞர்கள் தமிழகம் முழுவதும் ஒருவாரமாக போராட்டம் நடத்தி வந்தனர். சென்னை மெரினாவிலும் போரட்டம் நடைபெற்றது. அதையடுத்து,  தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக  ஒருசில பகுதிகளில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆனால் சென்னை மெரினாவில், அவசர சட்டம் வேண்டாம் நிரந்தர சட்டம் தேவை என  போராட்டம் தொடர்ந்தது.

அதைத்தொடர்ந்து கடந்த 23ந்தேதி அதிகாலை 5 மணி அளவில்  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார்  வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதன் காரணமாக வன்முறை வெடித்தது. போலீசார் தடியடி மற்றும் தீவைப்பில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக சென்னையில் வரலாறு காணாத வன்முறை நடைபெற்றது.

தமிழகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்ட மன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த முதல்வரும், காவல்துறை அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், போராட்டக்காரர்ளுகளுடன்  காவல்துறை உயர் அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதற்கு எந்தவித பலனும் இல்லை. அதே நேரத்தில் சமூக விரோதிகள்  சிலர் மாணவர்களிடையே  ஊடுருவி ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசை திருப்பிய தாகவும் முதல்வர் குற்றம் சாட்டினார்.

ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தின்போது,  ஓசாமா பின்லேடன் புகைப்படம் வைத்து குடியரசு தின விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதன் காரணமாக, குடியரசு தின விழாவை சிர்குலைக்க சிலர் திட்டமிட்டதாகவும் முதல்வர் கூறினார்.

மேலும் தமிழக இளைஞர்களின்  ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அளித்ததாகவும்,  2006-ம் ஆண்டு முதலே, தமிழகத்தில்  ஜல்லிக்கட்டுக்கு நடத்த  பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வந்துள்ளதையும் குறிப்பிட்டார்.

போராடிய மாணவர்களை கலைந்துசெல்ல வலியுறுத்தி வந்த நேரத்தில், சென்னை திருவல்லிக்கேணி  ஐஸ்அவுஸ் காவல் நிலையம் மீது சமூக விரோதிகள் பெட்ரோல் குண்டை வீசி தாக்குதல் நடத்தினர் என்றும்,  இந்த  கலவரத்தில் பொதுமக்களும், காவலர்களும் பாதிக்கப்பட்டனர்.  போலீசார் தாக்கப்பட்டனர் மற்றும் போலீஸ் வாகனங்கள்  பாதிப்புக்குள்ளாகி யுள்ளது.  மக்கள் பாதிக்கப்படுவதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

முதல்வர்  ஓபிஎஸ் அளித்த விளக்கம் திருப்தியாக இல்லை என்றும், ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் திமுக வெளிநடப்பு  செய்தது.