ஐந்தே நாளில் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்ட ஓ.ராஜா! ஓபிஎஸ் அழுத்தம் காரணமா?

சென்னை:

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டு உள்ளார்.  கட்சியில் இருந்து கடந்த 19ந்தேதி அவர் நீக்கப்பட்ட நிலையில், 5 நாளில் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

துணைமுதல்வர் ஓபிஎஸ் அழுத்தம் காரணமாக ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டி ருக்கலாம் என தககவல்கள் பரவி வருகின்றன.

ஓ. ராஜா                                         –                ஓ.பன்னீர் செல்வம்

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும், கொலை வழக்குகளிலும் சம்பந்தப்பட்டுள்ள துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா கடந்த 19ந்தேதி அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.

இது அதிமுகவினர் மட்டுமின்றி அரசியல் கட்சியினரிடையே வியப்பை ஏற்படுத்தியது. ஓ.ராஜா மீது ஏற்கனவே  மணல்  கடல் புகார் உள்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மதுரை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க ஒன்றிய தலைவராக கடந்த 19ந்தேதி அமைச்சர் செல்லூர் ராஜு முன்னிலையில் பொறுப்பேற்ற நிலையில், அன்று மாலையே கட்சியில் இருந்து நீக்கப்படவதாக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக இணைந்து  அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்த நிலையில், தான் செய்த தவறுக்காக ஓ.ராஜா வருத்தம் தெரிவித்ததால், அவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டுள்ளதாக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா நீக்கப்பட்டதாக 19ந்தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு

ஓ.ராஜா நீக்கப்பட்டது அதிமுகவில் பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தி வந்தது. மேலும், ராஜா டிடிவி அணிக்கு தாவ இருப்பதாகவும், திமுகவில் சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் ஓபிஎஸ்மீது பகிரங்கமாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை ஊடகங்களில் தெரிவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.

இதன் காரணமாக தன்னை பற்றிய தகவல்களும், அதிமுகவின் மானமும் கப்பலேறும் என்று ஓபிஎஸ் எடப்பாடியும், ஓ.ராஜாவை மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தி வந்ததாகவும் கூறப்பட்டது.

மேலும், ஓ.ராஜா ஊடகங்களை சந்தித்தால், அது  விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு அது பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும், அவர் மாற்று கட்சிக்கு போனால், அதிமுகவின் மானம் போகும் என்று வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டதற்கான அறிவிப்பு

இந்த நிலையில், ஓ.ராஜா தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததால் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.