அதிமுக உண்ணாவிரதத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் பங்கேற்பு: தொண்டர்கள் உற்சாகம்

சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணா விரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், துணைஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம்தாழ்த்தியது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் எதேச்சதிகாரப் போக்கை  கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங் களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் அதிமுக தலைமை அறிவித்திருந்தது.

அதன்படி இன்று  தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய போராட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் உள்பட கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, சென்னை மாவட்டம் சார்பில்  இன்று அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை இந்தப் போராட்டம் தொடர்கிறது. அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பபட்ட அமைச்சர்கள் பட்டியலில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பெயர்கள் இடம் பெறவில்லை.

இந்நிலையில், அவர்கள்  போராட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்ட முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வமும் கலந்து கொண்டுள்ளார். இது அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும, அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் எஸ்.கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, தி.நகர் சத்தியா, வி.என்.ரவி, டி.ஜி.வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ் உள்பட நூற்றுக்கணக்கானோர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்குபெற்றுள்ளனர்.

இதுபோல, திருவள்ளூர், காஞ்சீபுரம், திருச்சி, தஞ்சாவூர், சேலம், கன்னியாகுமரி, திண்டுக்கல், ஈரோடு, தேனி, திருப்பூர், நாமக்கல், கோவை, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், திருவாரூர், நெல்லை, சிவகங்கை, மதுரை, தர்மபுரி, நாகப்பட்டினம், நீலகிரி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, வேலூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, விருதுநகர், கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும்,  புதுச்சேரி, காரைக்காலிலும் அ.தி.மு.க. அறிவித்த உண்ணாவிரத போராட்டம் அங்குள்ள நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்று வருகிறது.