நாளை தமிழக பட்ஜெட்: தேர்தலை மனதில் கொண்டு சலுகைகளை அளிப்பாரா ஓபிஎஸ்….

சென்னை:

மிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில், துணைமுதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில், நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு சலுகைகள் வழங்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

(பைல் படம்)

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த மாதம் (ஜனவரி) 2-ந் தேதி தொடங்கி யது. கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து 3ந்தேதி  மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து 4ந்தேதி முதல் 7ந்தேதி வரை கவர்னர் உரை குறித்து விவாதம் நடைபெற்ற நிலையில், 8ந்தேதி முதல்வர் எடப்பாடியின் பதில் உரையுடன் சட்டசபை கூட்டம் முடிவடைந்தது.

அதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் 8ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையில், நாளை சட்டமன்றம் கூறுகிறது. காலை 10 மணிக்கு நிதி அமைச் சரும்,   துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகிறார் ஓபிஎஸ் தாக்கல் செய்தும்  8-வது பட்ஜெட் இது.

விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற இருப்பதால், இந்த பட்ஜெட் வழக்கமான பட்ஜெட்டை போல் அல்லாமல்,  வாங்குவங்கிகளை எதிர்நோக்கி  புதிய அறிவிப்புகளும், சலுகைகளும் பட்ஜெட்டில் இடம் பெறும் என்று தெரிகிறது.

சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில்  பல அறிவிப்புகள் வெளியிடப் பட்டுள்ள நிலையில், தமிழக அரசும், ஓட்டுக்களை பெறும் வகையில் பல்வேறு அதிரடி சலுகைகளை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ் பட்ஜெட் உரையை வாசித்து முடித்ததும் அன்றைய சட்டசபை நிகழ்வுகள் நிறைவு பெறுகிறது. அதைத் தொடர்ந்து, சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பதை முடிவு செய்வதற்காக சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்க இருக்கிறது.  அதில் பட்ஜெட் கூட்டம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

பட்ஜெட் கூட்டத்தொடரின்போது,  முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் (ஜீரோ ஹவர்) எதிர்க்கட்சியினர் முக்கிய பிரச்சினைகள் எழுப்பி அதுகுறித்து அரசிடம் விளக்கம் கோருவார்கள்.

அதன்பின்னரே பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும். இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிப்பார். இந்த விவாதம் முடிந்ததும், 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விவாதங்களின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முழுமையாக பதில் அளித்துப் பேச இருக்கிறார். அத்துடன் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடையும்.

பொதுவாக, பட்ஜெட் கூட்டத் தொடரில், துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் தேர்தலுக்கு பிறகு ஜூன் மாதம் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

இந்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை தமிழக அரசின் கடன் அளவு ரூ.3½ லட்சம் கோடியாக இருக்கும் என்று ஏற்கனவே மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கஜா புயல் நிவாரணச் செலவு, பொங்கல் பரிசு தலா ஆயிரம் ரூபாய் போன்ற செலவுகளினால், தமிழக அரசின் நிதிச்சுமை மேலும் உயர்ந்துள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு மேலும் அறிவிப்புகளை வெளியிட்டு சுமையை சுமக்க தமிழக அரசு தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தொடரில்  பரபரப்புக்கு பஞ்சமிருக்காது… கஜா புயல், கொடநாடு, அரசு ஊழியர்கள் போராட்டம் போன்ற முக்கிய பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியினரை அதகளப்படுத்த ஆயத்தமாகி வருகிறார்கள்..

Leave a Reply

Your email address will not be published.