எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க தினகரனை சந்தித்து ஆதரவு கேட்டார் ஓ.பி.எஸ்.!:  தங்க தமிழ்ச்செல்வன்

--

டப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்க்க டிடிவி தினகரனை சந்தித்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு கேட்டதாக,   டிடிவி ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவாளரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான தங்க தமிழ்ச்செல்வன் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்றுஅளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

“2017-ம் வருடம்  ஜூலை 12-ம் தேதி,  “தர்ம யுத்தம்” நடத்திக்கொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வம் தினகரனை சந்தித்து ஆட்சியமைக்க ஆதரவு கோரினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்று தினகரனிடம் பன்னீர்செல்வம் கூறினார்.

ஒரு வாரத்திற்கு முன்பு, டிடிவி தினகரனின் நண்பரிடம் பன்னீர் செல்வம் நேரம் கேட்டார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக, பேச வேண்டும் என்றுதான் நேரம் கேட்டார்.

மேலும், கடந்த வருடமும்  தினகரனை ஓபிஎஸ் நேரில் சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பு நடைபெற்ற இடத்தில், சிசிடிவி கேமராக்கள் இருந்திருக்கும்.  உரிய நேரத்தில் ஆதாரத்தை கொடுப்போம்” என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இது குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “அதெல்லாம் பழைய கதை” என்று சுருக்கமாக தெரிவித்துச் சென்றார்.