ஜெயலலிதாவுக்கு சசிகலா எழுதிய மன்னிப்பு கடிதம்: ஓபிஎஸ் வெளியிட்டார்

--

 

சென்னை:
சசிகலாவை எதிர்த்து செய்தியாளர்களை சந்தித்துவரும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஏற்கனவே சசிகலா ஜெயலலிதாவால் போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது குறித்து பேசினார்.

பின்னர், ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு போயஸ் தோட்ட இல்லத்திற்குள் மீண்டும் நுழைந்தார்.

இதுகுறித்து நேற்று நடைபெற்ற பி.எச்.பாண்டியன் செய்தியாளர் சந்திப்பின்போதும், அதிமுக வழக்கறிஞர் பிரிவு தலைவர் மனோஜ் பாண்டியன் இதே கருத்தை  கூறியிருந்தார்.

சசிகலா ஜெயலலிதாவுக்கு எழுதிய மன்னிப்பு கடிதத்தின் நகலை ஓபிஎஸ் இன்று வெளியிட்டார்.

அதில் சசிகலா எழுதியிருப்பதாவது,

‘‘என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர், நான் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததை அடிப்படையாக வைத்து, எனது பெயரை தவறாகப் பயன்படுத்தி, சில விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர் என்பதையும்,

அதனால் கட்சிக்கு பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டன என்பதையும், அவர்களின் தவறான நடவடிக்கைகளால் பல குழப்பங்கள் உண்டாக்கப்பட்டன என்பதையும், கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டது என்பதையும், அக்காவுக்கே எதிரான சில சதித்திட்டங்களும் தீட்டப்பட்டன என்பதையும் அறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியுற்றேன். மிகுந்த வேதனை அடைந்தேன்.

இவையெல்லாம் எனக்கு தெரியாமல் நடந்தவை என்பதுதான் உண்மை.

சந்தித்த நாள் முதல் இன்றுவரை, அக்கா நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு வினாடியும் நான் நினைத்திருக்கிறேனே தவிர கனவிலும் நான் அக்காவுக்குத் துரோகம் நினைத்ததில்லை.

என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம்.

அக்காவுக்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள்தான்.

இவ்வாறு சசிகலா அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.