தேனி

பிரதமர் மோடியின் ஆலோசனைப்படியே அதிமுக அணிகள் இணைந்ததாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறி உள்ளார்

அதிமுக சார்பில் தேனி அருகே ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.   அந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அவர், “நான் தர்மயுத்தத்தை தொடங்கியதன் காரணம் எம் ஜி ஆரும், ஜெயலலிதாவும் கட்டிக் காத்த இந்தக் கட்சியை யாரும் சிதைக்கக் கூடாது என்பதே அகும்.  நான் 1980ல் அதிமுக வின் வார்டு செயலாளராக பணியை தொடங்கினேன்.   அப்போது கைப்பிள்ளையாக இருந்தவர் என்னை அறிமுகப்படுத்தியதாக இப்போது சொல்கிறார்.   இந்தக் குடும்பத்தில் உள்ளவர்களால் நான் தற்கொலை செய்யும் அளவுக்கு தள்ளப்பட்டேன்.   நான் அந்த எண்ணங்களை முறியடித்து எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதாவின் லட்சியம் நிறைவேற இந்த தர்ம யுத்தம் தொடர்ந்தேன்.

அதன் பிறகு நான் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தேன்.   அவர் எங்கள் இரு அணிகளும் இணைய வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.    அவர் ஆலோசனைப்படி நாங்கள் இணைந்தோம்.    எனக்கு அமைச்ச்ர் பதவி வேண்டாம் என்ற போதும் மோடி என்னை பதவி ஏற்கச் சொல்லி வற்புறுத்தினார்.   அதையே மற்ற அமைச்சர்களும், கட்சியின் நிர்வாகிகளும் கூறவே நான் இப்போது அமைச்சரவையில் இருக்கிறேன்”  என தனது உரையில் கூறி உள்ளார்.