கிட்டதட்ட ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக, தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்பவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

எந்த ஒரு விசயமானாலும்  தனது கருத்துக்களை பளிச் என்றோ.. கொஞ்சம் சுற்றிவளைத்தோ உடனே தெரிவிப்பார்.  ஆனால் சுவைக்கு குறைவிருக்காது.  

ஆனால் முதுமையின் காரணமாக உடல் சற்று நலிவுற்று சமீபத்திய பொது விசயங்கள் எது குறித்தும் அவர்க ருத்து வெளியிடவில்லை .

“கருணாநிதி மட்டும் உடல் வலிவோடு இருந்திருந்து அவரிடம் தற்போதைய சூழல் குறித்து கேள்விகளைத் தொடுத்தால் எப்படி எல்லாம் பதில் சொல்லியிருப்பார்” என்ற ஏக்கம் அனைவருக்கும் இருக்கிறது.

அந்த ஏக்கத்தைப் போக்க திட்டமிட்டோம். 

இதோ கருணாநிதி பாணியிலேயே அவரது (!) கேள்வி – பதில் பாணி கற்பனை பேட்டியை தொகுத்திருக்கிறார் கோதண்டராமன் சபாபதி.  படியுங்கள்…

தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அசாதாராண அரசியல் சூழ்நிலைக்கு காரணம் என்ன.?

தேர்தல் முடிவு வெளியான நாளன்று நிருபர்கள்  என்னிடம் திமுகவின் தோல்விக்கான காரணம் என்ன என்ற கேள்வியை கேட்டனர். அதற்கு நான் அதிமுக வெற்றிபெற்றதே காரணம் என்றேன். அதே பதில்தான் இந்த கேள்விக்கும்.

தமிழக அரசை கலைக்க கவர்னரை திமுக கோருமா.?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மத்திய அரசு 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி ஆட்சிக்கலைப்பு செய்வது  மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதை தி.மு. கழகம் தொடர்ந்து பதிவு செய்துவந்திருக்கிறது. திமுக அந்த நிலைப்பாட்டில் என்றும் மாறாது.

அதிமுக அணி பிளவுபட்டிருப்பதற்கு திமுகதான் பின்னணியில் செயல்படுவதாக சொல்லப்படுகிறதே.?

எதிரியை களத்தில் நேரடியாக சந்திப்பதே திமு கழகத்தின் பழக்கம்.திரைமறைவு வேலைகளில் திமுக ஈடுபடவேண்டிய அவசியம் இல்லை.

துரைமுருகன் பன்னீர் செல்வம்தான் தொடர்ந்து முதல்வராக இருக்க வேண்டும் என பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவளித்திருக்கிறாரே.?

அதிமுகவின் பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு அவருக்கு இருந்த சமயத்தில்தானே தம்பி துரைமுருகன் இதை சொன்னார். அமைதியான சூழல் நிலவவே திமுக விரும்பும் என்பதற்கு இதை விட வேறு சான்று என்ன வேண்டும். இதன்பிறகு குழப்பத்தை விளைவித்தவர் யார் என்பதை மக்கள் அறிவார்கள்.

பிஜேபி அதிமுகவை பிளவுபடுத்த நினைப்பதாக கருதுகிறீர்களா.?

குன்றின்மேலிட்ட விளக்காக தெரியும் உண்மைக்கு தெளிவுரை தேவையா.?

முன்னால் முதல்வர் ஜெயலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறாரே.?

அம்மையார் மருத்துவமனையில் இருந்தபோதே அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து தெளிவுபடுத்துமாறு நான் கேட்டதையும் ஆளுங்கட்சியினரும் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்த பிற கட்சிகளும் ஊடகங்களும் என் கேள்வியை மறுத்ததையும் கேலி பேசியதையும் நான் இப்போது ஞாபகமூட்ட விரும்புகிறேன்.

தமிழகத்திற்கு தற்போதைய நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா.?

முடிவெடுத்துவிட்டு பொதுக்குழுவைக்கூட்டி அறிவிக்கும் பழக்கம் திமுகவிற்கு இல்லை. பொதுக்குழு செயற்குழு கூடி  தேர்ந்தெடுக்கப்படும். அது உடன்பிறப்புகள் விரும்பத்தக்கதாகவே இருக்கும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறாரே.?

ஜெயாலலிதாவின் வளர்ச்சிக்கும் வளமைக்கும் காரணமான அதிமுக தொண்டர்கள் இனியாவது அந்த இல்லத்தை சுற்றிப்பார்க்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் இதை அறிவித்திருப்பார்.

இரட்டைக்குழல் துப்பாக்கி என்று தாங்களாலே வர்ணிக்கப்பட்ட திக, சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளதே.?

திக – திமுக எதிர்ப்பு நிலைப்பாடு எடுக்கவில்லையே.?! அதிமுகவின் இரு அணிகளில் யாரை ஆதரிப்பது என்கிற நிலையில்தானே இந்த முடிவை எடுத்துள்ளது.

நேற்றுவரை சசிகலாவை ஆதரித்த பல எம்எல்ஏக்களும் எம்பிகளும் இன்று பன்னீர்செல்வத்தை ஆதரித்திருக்கிறார்களே.?

யாரை ஆதரிப்பது என்கிற குழப்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தானே அந்த எம்பிக்களும் எம்எல்ஏக்களும்.அவர்களுக்கும் அதே குழப்பம் வந்ததில் ஆச்சரியம் என்ன.?

# என்ன வாசகர்களே.. “கலைஞரின்” பதில்களைக் கேட்டது போல கொஞ்சமாவது திருப்தி இருந்ததா… ?