மத்தியஅமைச்சராகிறார் ஓபிஎஸ் மகன்? மோடியின் மெகா அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு

சென்னை:

பிரதமர் மோடி தலைமையிலான மெகா அமைச்சரவை இன்று பதவி ஏற்க உள்ள நிலையில், கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு இடம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.  கூட்டணி கட்சியினருக்கு தலா ஒரு இடம் ஒதுக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ள நிலையில், அதிமுகவில் இருந்து வைத்திலிங்கம் எம்.பி.யும், லோக்பா தேர்தலில் வெற்றி ஓ.பி.எஸ். மகனும்  அமைச்சர் பதவிக்கு போட்டிபோடுகின்றனர்.

இந்த நிலையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என டில்லி விட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது.

17வது மக்களவைக்கான தேர்தலில் பாஜக 303 இடங்களை பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி வழங்க முன்வந்துள்ளது.

அமைச்சரவை தொடர்பாக கூட்டணி கட்சிகள் ஏற்கனவே பாஜக தலைமையிடம் அப்ளிகேஷன் போட்டுள்ள நிலையில், அமைச்சர்கள் குறித்த பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா  ஆகியோர்  தீவிர ஆலோசனை செய்து அமைச்சர்களை தேர்வு செய்துள்ளனர்.

இந்த முறை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அமைச்சரவையில் இடம்பெறுவார் என நம்பப்படுகிறது. மேலும்,  தற்போதைய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர் உள்பட பலருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களுடன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த சிவசேனா, ஐக்கியஜனதாதளம், அதிமுக, லோக் ஜன சக்தி, சிரோன்மணி அகாலி தளம் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி வழங்க முன்வந்துள் ளது. இதற்கான அந்தந்த கட்சி தலைமையுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த அதிமுக எம்.பி.க்களுக்கு அமைச்சர் பதவி ஒதுக்குவதாக தொடர்பாக அமித்ஷா கட்சி தலைமையிடம் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது, எடப்பாடி தரப்பில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கத்திற்கு அமைச்சர் பதவி வழங்க கோரப்பட்டதாகவும், ஓபிஸ் தரப்பில், அவரது மகன்  ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி வழங்கும்படி வற்புறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், ஒபிஎஸ் மகன் ஓ.பி.எஸ் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி ஏற்க வாய்ப்பு கிடைக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.  பிரதமர் அலுவலகத்தில்  இருந்து ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், தனக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்தவித தகவலும் வரவில்லை என்று ரவீந்திர நாத் தெரிவித்து உள்ளார்.

இன்று பதவி ஏற்க உள்ள மெகா  அமைச்சரவையில் மொத்தம் 65 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி