சென்னை:

நாம் அனைவரும் இந்து, துணைமுதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பேசியது, அவரது சொந்த கருத்து என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தேனி பகுதியில் இந்து முன்னணி இயக்கம் நடத்திய விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற, அதிமுக எம்.பி.யும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமார், “முதலில் நாம் எல்லாம் இந்து; அப்புறம்தான் எல்லாம்” என்று பேசியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சென்னையில்   செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, முதல்வரின் வெளிநாடு  பயணம் குறித்து விமர்சிக்கும், மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் என்றும்,  முதல்வர் முதலீடுகளை ஈர்த்து வந்தால் விழா எடுப்பேன் என்று கூறியுள்ள மு.க.ஸ்டாலின், கண்டிப்பாக முதல்வருக்கு  விரைவில் அவர் விழா எடுப்பார், அந்த விழாவுக்கு  எங்களை அழைப்பார். அவர் சொன்னதிலிருந்து பின்வாங்கக் கூடாது என்று கூறினார்.

ஸ்டாலின் பக்குவப்பட்ட அரசியல்வாதியாக இருந்தால் முதலீடுகள் வந்தால் மகிழ்ச்சி என்று அவர் கூறியிருக்க வேண்டும் என்று விமர்சித்தவர், செய்தியாளர்களின், ஓபிஎஸ் மகனின் இந்து என்ற பேச்சுக் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு, அதிமுகவை பொறுத்தவரை ஜாதி, மதம் பாகுபாடு பார்க்காத கட்சி. ரவீந்திரநாத் சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து” என்றார்.

சிதம்பரம் குறித்து கருத்து தெரிவித்தவர், திகார் ஜெயிலுக்கு சென்று தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது திமுகவும், காங்கிரசும்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.