ஜெயலலிதா மரணம் : துணை முதல்வர் ஓ பி எஸ்சுக்கு விசாரணைக்கு அழைப்பாணை

சென்னை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை விசாரணைக்கு வர ஆணை பிறப்பித்துள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அந்த ஆணையம் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தில் ஜெயலலிதா, அவரது உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள், சசிகலாவின் உறவினர்கள், அபோலோ மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட 100க்கு மேற்பட்டோர் விசாரணை செய்யப்பட்டுளனர்.

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு எதிராக விசாரணை ஆணயத்தில் பிரமாணப் பத்திரம் அளித்தவ்ர்களிடம் தற்போது சசிகலாவின் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர். அது தொடர்பாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் விசாரணைக்கு வர வேண்டும் என ஆணையம் அழைப்பாணை அனுப்பி உள்ளது.

இந்த மாதம் 20 ஆம் தேதி அன்று விசாரணைக்கு வர துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு ஆணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகிய இருவரும் வரும் 19 ஆம் தேதி அன்று ஆணைய விசாரணைக்கு வர வேண்டும் என அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.