ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் வழக்கில் விரைவில் உச்சநீதி மன்றம் தீர்ப்பு: ‘திக்… திக்’ பயத்தில் எடப்பாடி அரசு

டில்லி:

டப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த  ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறை யீட்டு வழக்கில் பிப்ரவரி முதல் வாரத்தில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக எடப்பாடி தலைமையிலான அரசு ‘திக் திக்’கென காலத்தை ஓட்டி வருகிறது. தீர்ப்பு ஆட்சிக்கு எதிராக வரும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதால், அதிமுக அரசு கவிழ்ந்து விடும் என்ற எண்ண ஓட்டத்தில் தமிழக மக்கள் திளைத்து வருகிறார்கள்.

அதே வேளையில், உச்சநீதி மன்ற தீர்ப்பு எப்படி வந்தாலும், ஆட்சியை கவிழாமல், தக்க வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எடப்பாடி அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக 2ஆக உடைந்தது. அதைத் தொடர்ந்து ஆட்சி அமைத்த எடப்பாடி தலைமையிலான  அரசு சட்டமன்றத்தில்  நம்பிக்கை வாக்கு கோரிய போது, கட்சி கொறடா உத்தரவை மீறி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல் ஏக்கள் 11 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.

இதனால், கட்சித்தாவல் சட்டப்படி அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். ஆனால், சபாநாயகர் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டார்.

ஆனால், அதன்பின்னர்,  முதல்வருக்கு எதிராக கவர்னரிடம்  கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களை தகுதி நீக்கம் செய்தது சரி என சென்னை உயர்நீதி மன்றமும் கூறியது. அதன் காரணமாக தற்போது அந்த  18 இடங்களும் இன்னும் காலியாக உள்ளது.

இந்த நிலையில், ஓபிஎஸ் உள்பட 11 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்ற தீர்ப்பில், சபாநாயகரின் தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டிடிவி மற்றும் திமுக சார்பில் உச்சநீதி மன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு மீதான ஏற்கனவே நடைபெற்று முடிவடைந்து விட்டது.

இந்த நிலையில், பிப்ரவரி முதல் வாரத்தில் 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில்  தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தீர்ப்பு 11 எம்எல்ஏக்களுக்கு எதிராக வரும் பட்சத்தில் ஆட்சி கவிழ வாய்ப்பு இருக்கிறது. உச்சநீதி மன்ற தீர்ப்பை பொறுத்தே அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் தமிழகத்தில் நடக்கும் என்று கூறப்படுகிறது.

உச்சநீதி மன்ற தீர்ப்பு ஆட்சிக்கு எதிராக வரும் என்று  திமுக நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கிறது.

தமிழக சட்டசபையின்  மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 235,  இதில் தற்போது 21 எம்எல்ஏக்களின் இடம் காலியாக உள்ளது. இதன் காரணமாக தற்போது 214 உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், ஓபிஎஸ் அணியினர் மீதான தீர்ப்பு அரசுக்கு எதிராக வந்தால், மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் 203 ஆகிவிடும். தற்போதைய நிலவரப்படி, எடப்பாடிக்கு ஆதரவாக 104 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனால், இவர்களில் சிலர் எடப்பாடி மீது அதிருப்தியில் உள்ளனர். சுயேச்சை எம்எல்ஏக் களும் அரசு மீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், அரசுக்கு எதிராக உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தால், மீண்டும் சட்ட சபையில் எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது அதிருப்தி எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு எதிராக வாக்களித் தால், அரசு கவிழ்ந்து விடும் வாய்ப்பு உள்ளது.

இப்படி ஒரு சந்தர்ப்பம் கிட்டுமா என திமுக ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. எடப்பாடி அரசு பெரும்பான்மை இழந்தால், அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் துணையுடன் ஆட்சி அரியணை ஏற ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதே வேளையில் இன்னும் ஓருசில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதனுடன் சேர்த்து தமிழக சட்டமன்ற தேர்தலும் நடைபெற வாய்ப்பு ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை பொறுத்தே தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படுமா? என்பது தெரிய வரும்… இதன் காரணமாக எடப்பாடி அரசு நித்திய கண்டனம் பூரண ஆயுசு என்ற பழமொழிக்கேற்ப திக் திக் திக் என தனது ஆயுட்காலத்தை கடத்தி வருகிறது.