ஓபிஎஸ் தரப்பினர் தகுதி நீக்கம் வழக்கு: நவம்பர் 15ந்தேதிக்கு உச்சநீதி மன்றம் ஒத்திவைப்பு!

--

டில்லி,

மிழக துணை முதல்வர்  ஓபிஎஸ் உள்பட அவரது அணியை சேர்ந்த 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 15ந்தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக இரண்டாக பிளவு பட்டு, ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் தலைமையிலான இரு அணிகளாக செயல்பட்டு வந்தன.

அப்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில்  கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக,  ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர்.  பின்னர் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையை தொடர்ந்து இரு அணிகளும் இணைந்தன. அதன் காரணமாக ஓபிஎஸ்-சுக்கு துணை முதல்வர் பதவியும், மா.பா.பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை பதவிகளும் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, கவர்னரிடம் கடிதம் கொடுத்த டிடிவி ஆதரவு 18 எம்எல்ஏக்கள் பதவி அதிமுக கொறடாவின் புகாரின் பேரில் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அதைத்தொடர்ந்து, ஓபிஎஸ் தரப்பினரையும் பதவி நீககம் செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை சபாநாயகர் நிராகரித்த நிலையில், திமுக உயர்நீதி மன்றத்தை நாடியது.

ஆனால், உயர்நீதி மன்றமும் கைவிரித்து விட்ட நிலையில், உச்சநீதி மன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு உச்சநீதி மன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக நேற்றைய விசாரணையின்போது, இந்த வழக்கை நாளை (இன்று)  விசாரணைக்கு எடுக்கக் கூடாது என்றும் தங்களுக்கு வழக்கை எதிர்கொள்ள கால அவகாசம் தேவை என்றும்  வழக்கை வேறு ஒரு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.

ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், திட்டமிட்டபடி விசாரணை நடைபெறும் என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில், வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையை தொடர்ந்து வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு உச்சநீதி மன்றம் ஒத்தி வைத்தது.