சென்னை,

ரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் சட்டசபை சபாநாயகர் தனபாலை ஓபிஎஸ் அணியினர் சந்தித்து பேசியது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சசிகலாவுக்கும், ஓபிஎஸ்சுக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ஓபிஎஸ் தனி அணியாக இருக்கிறார். அவருக்கு ஆதரவாக 10 எம்எல்ஏக்களும், 12 எம்.பிக்களும் உள்ளனர்.

இதற்கிடையில் நேற்று சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அதையடுத்து ஆளுநர் உத்தரவு படி 15 நாட்களுக்குள் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும். அதன் காரணமாக நாளை சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது.

எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் இன்னும்  தொடர்ந்து கூவத்தூர்  சொகுசு விடுதியிலேயே தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர் இன்று காலை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். நாளை நடைபெறும் வாக்கெடுப்பில் கலந்து கொள்வது குறித்தும், எம்எல்ஏக்களின் ஆதரவை பெறுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

முற்பகல் 11 மணியளவில் ஓபிஎஸ் தலைமையில்  தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டத்தில்  அவரை ஆதரிக்கும் 10 எம்.எல்.ஏக்கள், 12 எம்.பி.க்கள் மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளான பொன்னையன், பி.எச்.பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்  திடீரென கோட்டைக்கு சென்று சட்டசபை தலைவர் தனபாலை சந்தித்து பேசினர்.

சட்டசபையில்  நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்கள் மாஃபா பாண்டியன், செம்மலை மற்றும் பொன்னையன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளது, சசிகலா தரப்பினருக்கு சந்தேகத்தை கிளப்பி உள்ளதாக கூறப்படுகிறது.  இதன் காரணமாக அதிமுக எம்.எல்.ஏக்கள் மத்தியில் பீதி நிலவுவதாக தகவல்கள் வருகின்றன.