டில்லி:

பிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் உச்சநீதி மன்றம் மீண்டும் ஒத்தி வைத்துள்ளது.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி‌, முன்னாள் டிடிவி தினகரன் ஆதரவாளரும், தற்போதைய திமுக உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன்  உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதாக திமுக மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர் கபில்சிபல் நேற்று தலைமை நீதிபதியிடம் உடனே விசாரிக்க நேரில் வலியுறுத்தினார்.

அப்போது, திமுகவின் கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஏ.கே.சிக்ரி பணி ஓய்வு பெற்றதால், நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீதான வழக்கை  புதிய அமர்வு இன்று விசாரிக்கும் என்று அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், வழக்கு  இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. தேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதுபோல, அதிமுக அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு  தொடர்ந்த வழக்குகளும் இன்று விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த வழக்கும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.