நாளை அதிமுக அரசின் கடைசி பட்ஜெட்: சலுகைகள் வாரி வழங்க திட்டம்?

சென்னை:

2020-21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. துணைமுதல்வரும், நிதி அமைச்சரு மான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய தயாராகி வருகிறார்… இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே எழுந்துள்ளது…

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சட்டப்பேரவை செயலகம் அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.  தற்போதைய  எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால்,  மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அதே வேளையில் பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பிரச்சினைகளான குடியுரிமை திருத்த சட்டம், ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை விவகாரம், ‘குரூப் – 4’ தேர்வு முறைகேடு, ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டம் போன்ற பிரச்னைகளை எழுப்பி ஆட்சிக்கு எதிராக கண்டனக் கணைகளை வீச எதிர்க்கட்சிகள் தயராகி வருகின்றன…

இதற்கிடையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மூடுவிழா காணும் வகையில்,  டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக மாற்றப்படும் என்றும், அதற்கான  சட்டம் இயற்றப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து விவசாயிகளியே வரவேற்பை பெற்றுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாளை பட்ஜெட், மீண்டும் அட்சியை கைப்பற்ற துடிக்கும் அதிமுகவுக்கு வாழ்வா, சாவா என்பதை நிர்மாணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, 2019-20-ம் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை 14,315 கோடியாகவும், நிதி பற்றாக்குறை 44,176 கோடியாகவும் இருக்கும் என்றும், அரசின் வரி வருவாய் 24 ஆயிரம் கோடியாக  அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

அதற்கு தகுந்தார்போல, சமீபத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலையை அதிரடியாக அரசு உயர்த்தி வருமானத்தை பெருக்கி உள்ளது. அத்துடன், உள்ளாட்சிக்கு வர வேண்டிய பாக்கி 3,370 கோடி மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் ஜிஎஸ்டி வரிவருவாயில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 4073 கோடி ரூபாயும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக பல்வேறு சலுகைகளை அறிவிக்க தயாராகி உள்ள தமிழகஅரசு,  அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உள்பட பல்வேறு சலுகை  அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.