சென்னை: அதிமுகவில் முதல்வர் பதவிக்கான போட்டியில் தீவிரமாக இறங்கி உள்ள எடப்பாடி, ஓபிஎஸ் இடையேயான பனிப்போர் தொடர்ந்து வரும் நிலையில், தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலன் அடிப்படையிலே எனது முடிவு இருக்கும், என கீதா உபதேசத்தை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் ‘பஞ்ச்’ டிவிட் பதிவிட்டுள்ளார்.

இது அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் எடப்பாடி தரப்புக்கும், ஓபிஎஸ் தரப்புக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து வருகிறது. இதனால், முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்ய முடியாமல்,  அதிமுக நிர்வாகிகள் குழப்பமடைந்து  உள்ளனர். தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால்,  அக்டோபர் 7-ஆம் தேதி அதிமுகவின் முதமைச்சர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும். ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்  பழனிசாமி ஆகியோர் அறிவிபார்கள்  என கட்சியின் துணை ஒருங்கிணைப்பானர் கே.பி.முனுசாமி அறிவித்தார்.

இதையடுத்து, எடப்பாடியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும்  அமைச்சர்கள், அதிமுக மூத்த உறுப்பினர்கள் தனித்தனியாக சந்தித்து வருகின்றனர்.   வரும் 6-ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை வர முதல்வர் எடப்பாடி  உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் பரவின. இதனாலும் சலசலப்பு எழுந்தது. இதற்கிடையில், ஓபிஎஸ்-சும் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாகவும், அங்குள்ள பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இது தொடர்பாக ஓபிஎஸ் சில நாட்களாக எந்தவொரு தகவலையும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில்,  இன்று திடீரென பரபரப்பு டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில்,  தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!! 

என பதிவிட்டுள்ளார்.

கிருஷ்ணனின் கீதா உபதேச வார்த்தைகளான எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்! என்பதை சுட்டிக்காட்டி, ஓபிஎஸ் பதிவிட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே சசிகலாவை எதிர்த்து போர்க்கொடி தூக்கியதுபோல, எடப்பாடியை எதிர்த்து மீண்டும் போர்க்கொடி தூக்கப்போகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நாளை மறுதினம் (7ஆம் தேதி) முதல்வர் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கடும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.