சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், கடைசி சாட்சியாக ஓபிஎஸ்-ஐ விசாரிக்கக் கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஜெ. மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அதிமுகவினர் கூறியதை தொடர்ந்து, அவரது மரணம் குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்களிடம், ஜெ., சசி உறவினர்கள், முன்னாள் தலைமை செயலாளர்கள், அமைச்சர்கள் என 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 21ம் தேதியும், தம்பிதுரை எம்.பி.யிடம் நேற்று விசாரணை நடத்தியது. அதைத்தொடர்ந்து  23ம் தேதி ஆஜராக வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது.

ஆனால், இன்று உலக முதலீட்டாளர் மாநாடு தொடங்குவதால், ஆணையத்தில் ஆஜராக முடியாது என்று ஒபிஎஸ் தரப்பில் விசாரணை ஆணையத்துக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வரும் 29ந்தேதி விசாரணை ஆணையத்தில் ஓபிஎஸ் ஆஜராவார் என்று தெரி விக்கப்பட்டு உள்ளது.

ஓபிஎஸ்தான் விசாரணை ஆணையத்தின் கடைசி சாட்சி என்று கூறப்படுகிறது. அத்துடன் ஆணையம் தனது விசாரணையை முடித்து, அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.