ஓபிஎஸ் அதிமுக தலைமை பொறுப்புக்கு வருகிறார்! ரகசிய பேச்சுவார்த்தையில் முடிவு?

--

சென்னை,

திமுக இரு அணிகளும் இணைவது தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு ஓபிஎஸ் நியமிக்கப்படுவதாகவும், ஆட்சிக்கு எடப்பாடியே தலைமை வகிப்பார் என்றும் ரகசிய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடைபெறுவது உண்மைதான் என்று அமைச்சர் ஜெயக்குமாரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என்று பிரிந்தது. சசிகலாவின் கைதுக்குப் பின்னர், இரு அணிகளும் பேச்சுவார்த்தை முயற்சியில் ஈடுபட்டன.

இதற்கிடையில், பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் குழுக்கள் கலைக்கப்பட்டதாக ஓபிஎஸ் அறிவித்தார். இதன் காரணமாக  இரு அணிகளும் இணைவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதற்கிடையில் தினகரன் இரட்டை இலை வழக்கில் ஜாமினில் வெளி வந்ததும், கட்சி பணியில் தீவிரமாக ஈடுபடப் போவதாக அறிவித்தார். இதன் காரணமாக எடப்பாடி அணியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இரு அணிகளும் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதன்படி கட்சியின்  தலைமை பொறுப்பை ஓபிஎஸ் ஏற்பார் என்றும், ஆட்சி எடப்பாடி தலைமையிலேயே நடைபெறும் என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஓபிஎஸ் அணியினர் இரண்டு பேருக்கு அமைச்சர் பதவியும் கொடுப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து  அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுடன் பேசும்போது, “பேச்சுவார்த்தைக் குழுக்கள் கலைக்கப்பட்டாலும் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைப்புக்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்துவருகிறது என்பதை ஒப்புக்கொண்டார்.

ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கிய நிர்வாகிகள், முதல்வரைச் சந்தித்தனர். நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கையும் உள்ளது. கட்சியை வழிநடத்த ஏழு பேர் கொண்ட குழுவும் ஏற்பட்டுள்ளது’ என்று  கூறியுள்ளார்.

குழுக்கள் கலைக்கப்பட்டது பற்றி கேட்டதற்கு, ‘குழு வேறு… இணைப்பு என்பது வேறு’ என்று தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You may have missed