நடக்காமலேயே போய்விட்டது கச்சேரி..

நடக்காமலேயே போய்விட்டது கச்சேரி..
நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
நேற்று மாலை தகவல் கேட்டது முதலே நம்ப முடியவில்லை. ரூபனின் நம்பருக்கு போன் செய்தால் ரிங் போனது யாருமே எடுக்கவில்லை.
பூமியை விட்டு பிரிவது என்பது எல்லோருக்குமே பொதுவானது என்பதால் நமக்கு நாமே தேற்றிக் கொண்டோம்.
பல ஆண்டுகால நண்பர்.. ஷூட்டிங்கிற்காக இரண்டு முறை காஞ்சிபுரம் வீட்டுக்கு வந்து பேசி விட்டுச் சென்றிருக்கிறார். நல்ல படிப்பாளி, திரைப்படக் கலைஞர், பத்திரிகையாளர் என பன்முகம் கொண்டவர்.
உணவுப்பிரியர்.. நாடு முழுக்க சுவையான உணவுகள் எங்கே கிடைக்கும் அவற்றின் மகத்துவம் என்ன என்றெல்லாம் விரிவாகச் சொல்வார்.
சினிமா அரசியல் இவற்றின் வரலாறு களை கரைத்துக் குடித்தவர் என்று தாராளமாகச் சொல்லலாம்.
மலையாளத் திரைப்பட பொக்கிஷங்கள் பற்றி நிறைய சொல்லுவார்..கேட்பதற்கு அவ்வளவு பிரமிப்பாக இருக்கும்..
இங்கே முகநூலில் நம் பக்கம் வந்து அவர் போடும் கமெண்ட்கள் எல்லாம் மிகவும் நச் ரகமாகவே இருக்கும்.
“தலைவரே, மலையாளக் கரையோரம் ஒதுங்கி நண்பர்களுடன் ஒரு சினிமா ஃபிளாஷ்பேக் கச்சேரி நடத்த வேண்டும். இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ளாமல் போன பல விஷயங்களை ஆவணப்படுத்துவது பற்றி விவாதிக்க வேண்டும்” என்பார்.
கண்டிப்பாக செய்வோம் என சொல்லியபடியே இருந்தோம். கடைசியில் அது நிறைவேறாமலேயே போய்விட்டது.
உங்களுடன் பேசிய ஒவ்வொரு தருணங்களும் ஒரு புத்தகத்தை படித்தது போலவே இருந்தது ரூபன். என்றும் எங்கள் மனதில் நிலையாக வாழ்வீர்கள்..