கான்பெரா: ஆஸ்திரேலிய அரசின் ‘ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா’ என்ற உயரிய விருது, அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்ப‍ை தொடரில், ஆஸ்திரேலிய அணிக்கு தலைமையேற்றிருந்த மைக்கேல் கிளார்க், அந்த அணிக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்தார். அதே ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெற்றார்.

இந்நிலையில் இவருக்கு இந்த உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த விருதை, ஆலன் பார்டர், பாப் சிம்சன், ஸ்டீவ் வாஹ், மார்க் டெய்லர் மற்றும் ரிக்கிப் பாண்டிங் ஆகியோர் பெற்றுள்ளனர். இந்தியாவின் சச்சின் டெண்டுல்கருக்கும் கடந்த 2012ம் ஆண்டு இந்த உயரிய கவுரவம் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா’ விருது குறித்து மைக்கேல் கிளார்க் கூறியதாவது, “நமது மண்ணில் பிற விளையாட்டுக்களைவிட ஆதிக்கம் செலுத்தும் கிரிக்கெட், நமது ரத்தத்தில் கலந்த ஒன்றாகும். கிரிக்கெட் சத்தம் கேட்டாலே, கோடை காலம் வந்துவிட்டதை நாம் உணர்வோம்.

இந்த விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியைக் கேட்டதும், முதலில் இது ஏதோ நமக்கான ‘முட்டாள் தின’ செய்தி என்றே நினைத்தேன். ஆனால், அந்த செய்தி உண்மை என்று அறிந்ததும் பெருமையாக உணர்கிறேன்” என்றுள்ளார் கிளார்க்.